அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு; அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி: அனைத்து உயர் கல்வியிலும் 8வது முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் பயின்ற அனைவரும் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் பயன்பெற அரசாணை வெளியிட வேண்டும் என, அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை:புதுச்சேரியில் மருத்துவம் சார்ந்த உயர் கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 1வது முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் இதில் பயன்பெற முடியும் என்ற நிபந்தனை விதித்ததால் பெரும்பான்மை அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறவில்லை.இதனால், கடந்த ஆண்டு அரசின் இட ஒதுக்கீட்டில் 34 மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு இருந்தும், 14 மாணவர்கள் மட்டும் சேர்க்கப்பட்டனர். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அனைத்து படிப்பிலும் 10 சதவீதம் இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளதை அ.தி.மு.க., வரவேற்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள நிபந்தனையை தளர்த்தினால் தான் அறிவிப்பின் பயன் ஏழை மாணவர்களை சென்றடையும்.புதுச்சேரியில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வியிலும் அரசுப் பள்ளியில் 8வது முதல் பிளஸ் 2 வரை கல்வி பயின்ற அனைவரும், இட ஒதுக்கீட்டில் பயன் பெறலாம் என, புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.எனவே, முதல்வர், அமைச்சர் ஆகியோர் இதில் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.