உள்ளூர் செய்திகள்

இன்ஜி., மாணவர்களுக்கு செப்., 12ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் துவக்கம்

இதில், காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் பங்கேற்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகம் - தொழிற்சாலை இணைப்பு மையத்தின் சார்பில், மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பொறியியல் கல்லூரிகளில், தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான (2009ம் ஆண்டில் பொறியியல் படிப்பை முடிப்பவர்கள்) வேலைவாய்ப்பு முகாம், 12ம் தேதி துவங்குகிறது. முதலாவதாக மதுரை மண்டல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர், காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது. இதில் மதுரை மண்டலத்தில் உள்ள 73 தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இரண்டு நாள் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் காக்னிசன்ட் நிறுவனம் கலந்து கொண்டு, தனது நிறுவனத்தில் பணிபுரிய ஆட்களைத் தேர்வு செய்கிறது. இதில் கலந்துகொள்ள, முதல் ஆறு செமஸ்டர்களில் சர்க்யூட் பிரிவு மாணவர்கள் சராசரியாக 80 சதவீதம் மதிப்பெண்கள், நான்-சர்க்யூட் பிரிவு மாணவர்கள் சராசரியாக 77 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., எம்.எஸ்., எம்.எஸ்சி., படித்த மாணவர்கள் 10ம் வகுப்பிலிருந்து தொடர்ச்சியாக 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் ஒருமுறை அனுமதிக் கட்டணமாக 750 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தெரிந்துகொள்ளலாம். சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், “காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று இடங்களிலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்