உள்ளூர் செய்திகள்

பொறியியல் துணை கவுன்சிலிங் 1,200 பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மூன்றுக்கும் குறைவான பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு உடனடித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. பிளஸ் 2 உடனடித் தேர்வெழுதி, பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கு பொறியியல் துணை கவுன்சிலிங் நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை வழங்கப்பட்டன. துணை கவுன்சிலிங்கிற்கு 1,200 பேர் விண்ணப்பித்திருப்பதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் வரும் 10ம் தேதி முடிவடைகிறது. இதன் முடிவில் காலியாக உள்ள இடங்களுக்கு, 11ம் தேதி பொறியியல் துணை கவுன்சிலிங் நடக்கவுள்ளது. வெளிமாநில மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவில், ஏழு இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங் விரைவில் நடக்கவுள்ளது. பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவில், 457 இடங்கள் காலியாக இருந்தன. பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு இந்த இடங்கள் ஒதுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்