கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
பெங்களூரு: கர்நாடகாவில், ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து, 1.91 லட்சம் ரூபாய் 'சைபர்' மோசடி செய்யப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவை சேர்ந்தவர் மகாதேவசாமி; பள்ளி ஆசிரியர். இவரது மொபைல் போனுக்கு சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத, 'வாட்ஸாப்' எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது.அதில், எஸ்.பி.ஐ., வங்கியில் இருந்து தொடர்பு கொண்டதாக கூறி, வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் எனவும், இதற்காக ஒரு செயலி அனுப்பி இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.இதை உண்மை என நம்பிய மகாதேவசாமியும், செயலியை பதிவிறக்கம் செய்தார். அதில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் வழங்கினார். வங்கி கணக்கு, ஏ.டி.எம்., கார்டு உட்பட அனைத்து விபரங்களையும் பதிவிட்டார்.அடுத்த சில வினாடிகளில், அவரது எஸ்.பி.ஐ., வங்கி கணக்கில் இருந்து, 1.91 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக, 'மெசேஜ்' வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகாதேவசாமி, பெங்களூரு தெற்கு சைபர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.