நீதிமன்றத் தடை நீங்கியதும் குரூப்2 தேர்வு முடிவு வெளியாகும்
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில், குரூப் 2 எழுத்துத் தேர்வு 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் பட்டியல் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இதற்கிடையே தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே. குமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் தேர்வு முடிவினை வெளியிட இயலாமல் உள்ளது. இந்த நிலையில், இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு வழக்குறைஞரை வலியுறுத்தக் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு நீங்கியதும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.