தரைப்படை காலியிடங்களை நிரப்ப 20 ஆண்டுகள் ஆகும்
இந்த அதிகாரி பணியிடங்களுக்கு சரியான நபர்களை தேர்வு செய்து கொடுக்கும் நமது மிலிடரி அகாடமிகளால் போதிய எண்ணிக்கையில் தர முடியவில்லை என்பதாலும் எண்ணற்றவர்கள் தங்களது ஓய்வு வயதுக்கு முன்பாகவே தரைப் படைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாலும் இந்த கடுமையான ஆள் பற்றாக்குறை காணப்படுவதாக தரைப்படை ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மிலிடரி பயிற்சி தரும் ஐ.எம்.ஏ., போன்ற அகாடமிக்களில் பயிற்சி தருவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே இந்த நிலையில் ஓரளவு முன்னேற்றம் காண முடியும் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அகாடமிக்களில் பயிற்சிக்கான அடிப்படை வசதியில் பெரும் மேம்பாடு தேவைப்படுவதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. டெகராடூனிலும் சென்னையிலும் உள்ள அகாடமிகளில் பயிற்சிக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். 12 லட்சம் பேர் உள்ள தரைப்படையில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 46 ஆயிரம் ஆகும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 1500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களது ஓய்வுக் காலத்திற்கு முன்பாகவே வி.ஆர்.எஸ்., பெற்று சென்று விடுகின்றனர். தேவைக்கேற்ப அதிகாரிகளை பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமானால் தரைப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் அதிகாரிகள் பணிக்கு புதிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் 1700 பேர் மட்டுமே இப்படி பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். 2 பயிற்சி அகாடமிகளிலும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு நம்மால் 1450 பேருக்கு மட்டுமே பயிற்சி தர முடிகிறது. ஆனால் இது 2 ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ராணுவப் பணிகளில் ஏன் பல இளைஞர்கள் ஆர்வமாக சேரவில்லை என்பது குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு அவர்களது சம்பளம் மற்றும் படிகளை சமீபத்தில் அதிகரித்தது. எனினும் ராணுவப் பணி வாய்ப்புகள் குறித்த போதிய விழிப்புணர்ச்சியை மத்திய அரசு ஏற்படுத்தவில்லை என்பதே ராணுவ அதிகாரிகளின் ஆதங்கமாக உள்ளது.