உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்பில் சேர்ந்த 22 இன்ஜினியர்கள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், 6 முதல் 17ம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடந்தது. 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,398 இடங்கள், நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 283 இடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 893 இடங்கள் என மொத்தம் 2,659 இடங்களுக்கு இக்கவுன்சிலிங் நடந்தது. முதல் நாளான 6ம் தேதி விளையாட்டு வீரர்கள் பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளில் தலா மூவர், உடல் ஊனமுற்றோர் பிரிவில் 14 பேர் மற்றும் முதல் 10 ரேங்க் பெற்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை இடங்கள் ஒதுக்கப்பட்டன. சில ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தும், அப்படிப்பை கைவிட்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சியால், பொறியியல் படிப்பை விட, மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா கூறியதாவது:பி.இ., பி.டெக்., படித்துக் கொண்டிருந்த மற்றும் படிப்பை முடித்த 22 மாணவர்கள், இந்த ஆண்டு முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேர்ந்துள்ளனர். மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களிலும், 22 பேர் பி.இ., பி.டெக்., படித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் படித்து முடித்தவர்கள் உள்ளனர். பொறியியல் படிப்பில் மறு கவுன்சிலிங் இல்லாததால், அங்கு சேர்க்கை ஆணையை பெற்று, பிறகு மருத்துவப் படிப்பில் சேர வரும் மாணவர்களிடம், பொறியியல் சேர்க்கை ஆணையை சமர்ப்பிக்குமாறு கேட்பதில்லை. இவ்வாறு ஷீலா கூறினார். இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் இதுவரை 12 பேர் மருத்துவப் படிப்பை கைவிட்டு, பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளில், மருத்துவப் படிப்பை கைவிட்டு, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்