கள்ளக்குறிச்சி கல்விக்கடன் முகாமில் ரூ.2.44 கோடிக்கு காசோலை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த கல்விக்கடன் முகாமில் 2.44 கோடி ரூபாய்க்கு கல்விக் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வங்கியில் கல்விக் கடன் பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகள் சார்பில் கல்விக் கடன் முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் கல்லுாரி மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான காசோலையை கலெக்டர் பத்மஜா வழங்கினார். பி.எம்.வித்யா லட்சுமி போர்டல் மூலம் விண்ணப்பித்திருந்த 35 மாணவர்களுக்கு இந்தியன் வங்கி, யூனியன் வங்கி, ஐ.டி.பி.ஐ., கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.ஓ.பி. உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மூலம் 2.44 கோடி ரூபாய்க்கான காசோலையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.முகாமில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற வழிகாட்டும் பி.எம்.வித்யா லட்சுமி போர்டல் மூலம் விண்ணப்பித்து வங்கிகளில் கல்விக் கடன் பெற அறிவுறுத்தப்பட்டது.இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் சேஷா கிரிரான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.