சேலத்துக்கு வந்த 3ம் பருவ பாட புத்தகங்கள் பள்ளி வாரியாக பிரித்து அனுப்ப ஏற்பாடு
சேலம்: சேலம் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், நேற்று சென்னையிலிருந்து சேலம் வந்து சேர்ந்தன.சேலம் மாவட்டத்தில், 1,487 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு நேற்று தொடங்கி, டிச., 23 வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிந்து மீண்டும் ஜன., 2ல் பள்ளிகள் திறக்கும் போது, அவர்களுக்கான எண்ணும் எழுத்தும் பாடப்புத்தகம் மற்றும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு பாடநுால் கழகத்திலிருந்து, சேலம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, நேற்று மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்திறங்கின. இவற்றை பள்ளி வாரியாக பிரித்து, அடுத்த வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 1.20 லட்சம் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி புத்தகங்களும் வந்துள்ளன. இவையும் ஜனவரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.