ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி 38வது பட்டமளிப்பு விழா
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரியில், 38வது பட்டமளிப்பு விழா, நடந்தது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரியின், 38 வது பட்டமளிப்பு விழா, கல்லுாரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமையில், நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜா, புல முதன்மையர் ராமசாமி, நிர்வாக அலுவலர் சதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், அமைச்சர் ராஜ்குமார் பங்கேற்று பேசியதாவது:செயற்கை நுண்ணறிவு ரோபோடிக்ஸ் தானியங்கி இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்பங்களில், மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.இதனைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியது இல்லை; கற்றுக்கொண்டு நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், வேலை கொடுப்பவர்களாவும், உருவாகுங்கள்.தமிழகத்தில், நாம் எதிர்கொள்ளும் நகர்ப்புற வெள்ளம், போக்குவரத்து நெரிசல், நீர் பற்றாக்குறை சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு பொறியாளர்கள் அறிவை பயன்படுத்த வேண்டும்.நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, முதலிடம் பிடித்த 11 மாணவ, மாணவியருக்கு அமைச்சர் ராஜ்குமார், ஆதிபராசக்தி கல்வி மருத்துவ பண்பாட்டு அறநிலையத்துறை துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தங்கப்பதக்கங்களை வழங்கினர்.மேலும், இளநிலை பிரிவில் 201 மாணவர்களும், முதுநிலை பிரிவில் 92 மாணவர்களும் என மொத்தம் 293 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.