உள்ளூர் செய்திகள்

ராஜஸ்தான் தொண்டு நிறுவனத்துக்கு ராமன் மகசேசே விருது அறிவிப்பு

மணிலா: பெண் கல்விக்காக லாப நோக்கமின்றி செயல்பட்டு வரும் ராஜஸ்தானை சேர்ந்த தொண்டு நிறுவனத்துக்கு, 2025ம் ஆண்டுக்கான 67வது, 'ராமன் மகசேசே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதின் 67வது ஆண்டு விழா, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மெட்ரோபாலிட்டன் தியேட்டரில் நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு விருது பெறும் நபர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதில், 'தொலைதுார கிராமங்களில் பள்ளி செல்லாத பெண்களின் கல்விக்காக சேவையாற்றி வரும் இந்திய அமைப்பான 'எஜுகேட் கேர்ள்ஸ்' அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராமன் மகசேசே விருதைப் பெற்ற முதல் இந்திய அமைப்பாக, 'எஜுகேட் கேர்ள்ஸ்' வரலாறு படைத்துள்ளது' என, ராமன் மகசேசே விருது அறக்கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது-.அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:எழுத்தறிவின்மையில் இருந்து சிறுமியர், பெண்கள் மற்றும் இளம் பெண்களை விடுவித்து, அவர்களின் திறன்களை ஊக்குவித்தல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை கல்வியின் வாயிலாக அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் வழங்கியமைக்காக, 'எஜுகேட் கேர்ஸ்' என்ற 'பெண் கல்வி' அமைப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது-. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, சபீனா ஹுசைனால் நிறுவப்பட்ட 'எஜுகேட் கேர்ள்ஸ்' 50 பள்ளிகளுடன் துவங்கப்பட்டு, தற்போது 30,000க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சென்றடைந்துள்ளது.உள்ளுர் சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, பள்ளி செல்லாத சிறுமியரை அடையாளம் கண்டு இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான சிறுமியரின் கல்விக்கு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன், இந்தியாவின் தனிநபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருந்தாலும், ஒரு இந்திய அமைப்புக்கு விருது வழங்குவது இதுவே முதல்முறை.நடப்பாண்டு ராமன் மக சேசே விருதுக்கு, 'எஜுகேட் கேர்ள்ஸ்' மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பணிக்காக மாலத்தீவைச் சேர்ந்த ஷாஹீனா அலி, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக பணியாற்றி வரும் பிலிப்பைன்ஸ் பாதிரியார் பிளாவியானோ அன்டோனியோ எல்.வில்லனுவேவா ஆகியோரும் விருது பெறுகின்றனர்.விருது பெறும் ஒவ்வொருவருக்கும், பிலிப்பைன்சின் மறைந்த முன்னாள் அதிபர் ராமன் மகசேசேவின் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்