சென்னை கடல்சார் பல்கலை.யில் 6 புதிய படிப்புகள்!
இத்தகவலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ள பி. விஜயன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கான 106 ஏக்கர் நிலம் போக, மீதமுள்ள இடத்தில் கடல்சார் வளாகம் கட்டப்படுகிறது. ரூ.245 கோடி செலவில் பல்கலைக்கழகக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. 2010ம் ஆண்டுக்குள் அனைத்துக் கட்டடங்களும் கட்டி முடிக்கப்படும். இந்த புதிய பல்கலைக்கழக கட்டடங்களுக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்ட இருக்கிறார் என்று துணைவேந்தர் பி. விஜயன் தெரிவித்தார் மாரிடைம் மேனேஜ்மெண்ட், போர்ட் மேனேஜ்மெண்ட், இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் ஆகிய துறைகளில் எம்.பி.ஏ., படிப்புகள், மாரிடைம் லா பட்டப் படிப்பு உள்பட 6 படிப்புகள் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். கோல்கட்டா, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் பிராந்திய வளாகங்கள் உள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தவிர, கடல்சார் படிப்புகளை நடத்தும் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டத்தைக் கொணடு வர நடவடிக்கை எடுக்கப்படும். கடல்சார் படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுக்கான தற்போதைய அனுமதி முடிந்த பிறகு, அந்தப் படிப்புகளைத் தொடர்ந்து நடத்த கடல்சார் பல்கலைக்கழகத்திடம் அனுமதி பெற வேண்டும். புதிதாக கடல்சார் படிப்புகளைத் தொடங்கும் கல்வி நிறுவனங்களும் இந்தப் பல்கலைக்கழகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். சென்னையில் கடல்சார் படிப்புகளைப் படிக்க தமிழக மாணவர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. இப்படிப்புகளைப் படித்த மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து வருகிறது என்பதை தமிழக மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து கடல்சார் படிப்புகளைப் படிக்கச் சேரும் ஆதிதிராவிட, பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 40 மாணவர்களின் அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது என்றார் விஜயன்.