பள்ளிகளில் சிசிடிவி ரூ.6.50 கோடி ஒதுக்கீடு
சென்னை: சென்னையில் உள்ள, 245 பள்ளிகளில், சிசிடிவி கேமரா பொருத்த, 6.50 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 417 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 1.20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என, நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிக்கூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், சிசிடிவி கேமரா பொருத்த, 6.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த ஒதுக்கீட்டின்படி, 245 பள்ளிகளில் கேமரா பொருத்தப்படும். பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, வளாக பரப்பளவு அடிப்படையில் எந்தெந்த பள்ளிகளில் எவ்வளவு கேமரா பொருத்த வேண்டும் என்ற கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.இதற்கான ஒப்பம் கோரும் நிறுவனங்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.