உள்ளூர் செய்திகள்

உறுப்பு கல்லுாரிகளில் விரிவுரையாளர்களுக்கு 7 மாதம் சம்பள பாக்கி

சென்னை: பாரதிதாசன் பல்கலையின், 10 உறுப்பு கல்லுாரி களில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏழு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை' என, பல்கலை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகளில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அதன் கீழ் செயல்பட்ட உறுப்பு கல்லுாரிகளின் ஆசிரியர்களுக்கு, சம்பளம் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது.இதையடுத்து, 2020ம் ஆண்டில், அரசு பல்கலைகளின் கீழ் செயல்பட்ட உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டு, உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.இதன்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலையின் கீழ் செயல்பட்ட 10 உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாறின. இந்த கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, உயர் கல்வித்துறை வழியே ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த கல்லுாரிகள், பாரதிதாசன் பல்கலையின் நிர்வாகத்தில் இருந்த போது, அரசின் நிதியுதவி பெறாத பல்வேறு பாடப்பிரிவுகள், உறுப்பு கல்லுாரிகளில் நடத்தப்பட்டன. இவற்றுக்காக கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக ஊழியர்கள் என, 116 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு மட்டும் பல்கலைகளில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பல்கலையில் இருந்து ஊதியம் வழங்காமல் பாக்கி வைத்துள்ளதாக, அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கமான ஏ.யு.டி., குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து, அரசு உயர் கல்வித்துறை செயலருக்கு, ஏ.யு.டி., கடிதம் எழுதிய பிறகும், பல்கலை தரப்பிலோ, அரசு தரப்பிலோ ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், செயலரும் இதில் தலையிட்டு, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் செல்வத்துக்கு உரிய உத்தரவுகள் பிறப்பித்து, தாமதமின்றி ஊதிய பாக்கியை வழங்க வேண்டும் என, ஏ.யு.டி., சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்