பால், இறைச்சி வாங்க ரூ.700 போதாது மாணவர் விடுதி காப்பாளர்கள் ஆவேசம்
சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையில், பால், இறைச்சி உட்பட, உணவுக்கு தேவையான பொருட்கள் வாங்க, அதிகாரிகள் தலா ஒரு மாணவருக்கு மாதம் 700 ரூபாய் மட்டும் தருவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் விடுதியில், மாணவ, மாணவியருக்கு உணவு சமைப்பதற்காக, அரிசி, சமையல் எண்ணெய், பால், முட்டை, இறைச்சி உள்ளிட்ட 37 வகை பொருட்கள் வாங்க, கல்லுாரி மாணவர்களுக்கு மாதம் தலா 1,500 ரூபாய்; பள்ளி மாணவர்களுக்கு, தலா 1,400 ரூபாய் வழங்கப்படுகிறது.விடுதி காப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில், மளிகைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்திய பின், அரசிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, செலவு செய்த தொகையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருந்தது.இம்முறையில் ஊழியர்கள் மோசடியில் ஈடுபடுவதால், விடுதிகளுக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை, நேரடியாக அரசே வினியோகம் செய்யும் புது திட்டத்தை, கடந்த அக்டோபரில் துவக்கியது.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக, விடுதிகளுக்கு வேண்டிய ரவை, மைதா, பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை, அரசு வினியோகம் செய்து வருகிறது.மீதமுள்ள அரிசி, காய்கறி, பால், முட்டை, இறைச்சி உள்ளிட்ட அன்றாடம் தேவையான பொருட்களை, காப்பாளர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு, தலா ஒரு மாணவருக்கு, 700 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த தொகையை வைத்து, மாணவர்களுக்கு வேண்டிய, இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், வாங்க முடியவில்லை என, காப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:கடந்த அக்டோபர் முதல் விடுதிக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை, அரசே வினியோகம் செய்து வருகிறது.இதற்கு, அதிகாரிகள் 800 ரூபாய் எடுத்துக் கொள்கின்றனர். அரிசி, பால், முட்டை, இறைச்சி, காய்கறிகள், சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க, 700 ரூபாய் தருகின்றனர்.தற்போதுள்ள சந்தை நிலவரத்தில், 700 ரூபாய் தொகையை வைத்து, இந்த பொருட்களை வாங்க முடியவில்லை. அரசு வழங்கும் பருப்பு, உள்ளிட்ட மளிகைப் பொருளுக்கு, 800 ரூபாய்.ஆனால், நாங்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு, 700 ரூபாய் என்பது வேதனையாக உள்ளது. எனவே, இதை தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.