தி.மு.க., ஆட்சியில் ஏமாற்றமடைந்த 751 உதவி டாக்டர்களுக்கு பணி நியமனம்
சென்னை: தி.மு.க., ஆட்சியில் ஏமாற்றமடைந்த, 751 உதவி டாக்டர்களுக்கு, பணி நியமன ஆணையை, முதல்வர் விஜய் வழங்கினார்.தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 1,100 டாக்டர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பானை, கடந்த ஆண்டு நவ., 21ல் வெளியிடப்பட்டது.இதில், 20,867 பேர் தேர்வு எழுதி, 16,986 பேர் தேர்ச்சி பெற்றனர். காலி பணியிடத்திற்கு ஏற்ப நியமனம் எனக் கூறி, 1,071 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலந்தாய்வு வாயிலாக, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கடந்த மார்ச் 12ம் தேதி நடந்தது. இதில், 320 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.மற்றவர்களுக்கு காலிப்பணியிடத்திற்கு ஏற்ப, பணி நியமன ஆணை வழங்கப்படும் என, அப்போதைய தி.மு.க., அரசு அறிவித்தது. அவர்கள் பணி நியமனம் வழங்கக் கோரி, மருத்துவ துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். ஆட்சி மாறிய பின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., ஆட்சியில் தேர்வான, 751 டாக்டர்களுக்கும், முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார். மாற்றுத்திறனாளி டாக்டர் ஒருவருக்கு, மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று, பணி நியமன ஆணையை, முதல்வர் வழங்கினார்.அதே போல், தி.மு.க., ஆட்சியில், நீதிமன்ற வழக்கு காரணமாக, சுகாதார ஆய்வாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், அப்பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதனால், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கும், முதல்வர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பொது மருத்துவ பிரிவு கட்டடத்தில், 17 கோடி ரூபாய் மதிப்பில், 30 படுக்கையுடன் அமைக்கப்பட்ட இரண்டாம் தளம்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில், 57.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் என, 139.47 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு மருத்துவ கட்டடங்கள், நவீன உபகரணங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.