உள்ளூர் செய்திகள்

பார்லி.,யில் நிறுவப்பட்ட செங்கோல்; 9ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் சேர்ப்பு

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, 'செங்கோல்', என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் 9ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் திறப்பு விழாவின் போது, சோழர் கால ஆட்சி அதிகாரத்தின் கலாசார அடையாளமாகவும், தமிழர்களின் பாரம்பரிய பெருமை கொண்டதாகவும் கருதப்படும் செங்கோலை பிரதமர் மோடி சபாநாயகர் இருக்கை அருகே உள்ள கண்ணாடி பேழையில் நிறுவியிருந்தார்.நம் நாடு சுதந்திரம் அடைந்த, 1947, ஆக., 15 அன்று, பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து, இறையாண்மை கொண்ட இந்திய அரசிற்கு அதிகார மாற்றம் நிகழ்ந்ததன் அடையாளமாக இந்த செங்கோலை, நாட்டின் முதல் பிரதமரான நேருவிடம், தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்கள் வழங்கினர். அப்போது பன்னிரு திருமுறையின், இரண்டாம் திருமுறையில் உள்ள கோளறு பதிகம் பாடப்பட்டது.இந்த வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை தான் பிரதமர் நரேந்திர மோடி, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மீண்டும் நிறுவினார் என என்.சி.இ.ஆர்.டி.,யின் 9ம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதில், 'நீதி தவறாத ஆட்சியின் அடையாளமாக செங்கோலை பயன்படுத்தும் பராம்பரியம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழப் பேரரசு காலத்தில் தொடங்கியது' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்