உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியிறக்கம்?

சென்னை: அரசு பள்ளிகளில் இளநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அவர்களுடைய பணியை, பட்டதாரி ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை, இளநிலை ஆசிரியர்களாக பதவியிறக்கம் செய்வதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இளநிலை ஆசிரியர்களும், 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். தொடக்க கல்வித் துறையில், பல ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. குறிப்பாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இளநிலை ஆசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது. இளநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல், மாநில அளவிலான பதிவு மூப்பின் அடிப்படையில் இளநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த பிரச்னை காரணமாக புதிய இளநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், பல ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதைத் தொடக்க கல்வித் துறை கண்டறிந்தது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர்களை வைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடந்த, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. துறையின் புதிய உத்தரவு குறித்த தகவலை, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ‘நாங்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வந்தாலும், எங்களில் பல ஆயிரம் பேர், பதவி உயர்வு பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கின்றனர். பதவி உயர்வை எதிர் பார்க்கும் எங்களை இடைநிலை ஆசிரியர்க ளாக பதவியிறக்கம் செய்யும் நடவடிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் களை பதவியிறக்கம் செய்யும் முயற்சியை இயக்குனரகம் கைவிட வேண்டும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்