பள்ளிகளில் கேமரா அமைக்கப்படுமா?
திருப்பூர்: அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை நடைமுறைபடுத்த, கல்வித்துறை தீவிரம் காட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை கண்டறிதல், வகுப்பறைகளில் ஆசிரியர்களின் நடவடிக்கை, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் செயல்பாடு போன்றவற்றை கண்காணிக்க ஏதுவாக, தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் அன்னியர் நடமாட்டத்தை தவிர்க்க, இது உதவுகிறது. சமுதாயத்தில் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கல்வித்துறை தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் சில மாநகராட்சி பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது.ஆனால், திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. நகர பகுதிக்குள், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கும் அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில், கேமரா பொருத்துவது மிக அவசியம். மாணவர்கள் இடையே ஏற்படும் கோஷ்டி மோதல், மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், பள்ளி வளாகங்களில் மது, சிகரெட் பழக்கம் உள்ள மாணவர்களின் நடவடிக்கை, பள்ளிக்குள் புகும் சமூக விரோதிகள் என, பலவிதங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கல்வித்துறைக்கு பயன் தருவதாக அமையும். தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில், எவ்வித முறைகேடும் நடக்காமல் தடுக்கவும், கண்காணிப்பு கேமரா, பள்ளிகளில் இருப்பது அவசியமாகிறது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவோ, முன்னாள் மாணவர் அமைப்பு மூலமாகவோ, கேமரா பொருத்தும்திட்டத்தை செயல்படுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.