ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: அமைச்சர்
நிரந்தர பள்ளி கட்டடம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளிடம் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சுப்ரமணிய பாரதியார் பள்ளி கட்டடம் மாணவிகள் படிக்கும் சூழலில் இல்லை. எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலையுள்ளதால் பொதுப்பணி துறை அங்கு பள்ளி நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.அதன் பேரில், மாணவிகளை வேறு பள்ளியில் சேர்த்து நடத்தலாம் என முடிவு செய்து நடத்தினோம். அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த மாணவிகள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருவாரத்தில் மாணவிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். பெற்றோர், ஆசிரியர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காணப்படும்.சுப்ரமணிய பாரதியார் பள்ளியை இடித்து கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கவும், புதிதாக கட்டவும் விதிமுறைகள் உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இடமாறும் மாணவிகளை திட்டுவதாக புகார் வந்துள்ளதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னையை ஆசிரியர்கள் துாண்டிவிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சுப்ரமணிய பாரதியார் பள்ளி தனித்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.