மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பறிபோகிறது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான உலக திறனாய்வு உடல்திறன் தேர்வு நடத்தாததால் மண்டல அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை கிடைக்கும் வாய்ப்பு பறிபோகிறது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6 முதல் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி அளவில் உலக திறனாய்வு உடல்திறன் தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் உயரம், உடல் எடையைத் தாண்டி வேகம், நிலைப்புத்தன்மை, வலிமை, நீண்டநேரம் சக்தியை செலவிடுதல், உடலியக்க மாறுபாடு ஆகியவற்றின் கீழ் 50 மீட்டர், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், திரும்பி திரும்பி ஓடுதல் (ஷட்டில் ரன்), 600 , 800 மீட்டர் ஓட்டப்போட்டி நடத்தப்படும். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருவாய் மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு 4 அல்லது 5 மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்படும் மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.முதலிடம் பெறுபவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வாகும் மாணவர்களின் திறனைப் பொறுத்து தடகளம் உட்பட குழு விளையாட்டுப் போட்டிகளில் அனுமதிக்கப்படுவர். 2019 வரை போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் 2020 ல் கொரோனா தொற்று வந்ததால் தொடர்ந்து இரண்டாண்டுகள் போட்டி நடத்தவில்லை.2022 - 23 ல் நிலைமை சீரான போதும் போட்டி நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வாய்ப்பு பறிபோனது. எனவே இந்தாண்டாவது உலக திறனாய்வு போட்டி நடத்தி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கி கவுரவப்படுத்த வேண்டும்என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.