கல்வி அதிகாரிகள் கூட்டம்
மதுரை: நீதிமன்ற வழக்குகளில் கல்வித்துறை அதிகாரிகள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும் என, மதுரையில் நடந்த கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.மதுரையில் கல்வித்துறை சார்பில் மாநில அளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தலைமை வகித்தார். துவக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், மெட்ரிக் பள்ளி இயக்குனர் நாகராஜமுருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வரவேற்றார். இணை இயக்குனர்கள் கோபிதாஸ், ராஜேந்திரன், சசிகலா, ஜெயக்குமார், அமுதவல்லி உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளிகளில் ஆய்வுக்குச் செல்லும், பள்ளிகளை பார்வையிடும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். 6 - 9ம் வகுப்பு மாணவர்களில் தமிழ், ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாதவர்களை கண்டறிய வேண்டும். அவர்களை காலாண்டு தேர்வுக்குள் தமிழ், ஆங்கிலம் எழுதப்படிக்க செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு வராத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.நீதிமன்ற வழக்குகள் தற்போது அதிகரித்து வருகின்றன. முன்பு வழக்குகளில் நோட்டீஸ் வழங்குவர். தற்போது அதிகாரிகளுக்கு தண்டனையே கிடைக்கிறது. எனவே, அதில் அதிக கவனம் செலுத்துவதுடன், நிலுவையின்றி வழக்குகளை கையாள வேண்டும். உதவி பெறும் பள்ளிகளில் பணியாளர் நியமனத்தில் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.