உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் போராட்டம் சரிதானா?

நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து, அதைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து கல்வியாளர்கள், கல்லூரி தரப்பினர் சிலர் கூறியதாவது: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது மத்திய அரசு திடீரென குற்றம்சாட்டுவது வியப்பாக உள்ளது. பல்கலைக் கழக ஆட்சிக்குழுவில் கணவன், மனைவி, மகன், மகள்கள் உள்ளனர் என பல்கலைக்கழக மானியக்குழு திடீரென கூறியுள்ளது. அவர்கள் அந்த குழுக்களில் இடம் பெறக்கூடாது என, எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது? பல்கலைக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கும் முன்பே இது பற்றிய விவரங்கள் மானியக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அப்போது ஏன் இது பற்றி யாரும் எதுவும் கேட்கவில்லை. பல்கலைக் கழகங்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். முறைகேடுகளை களைய தனி சட்டத்தையோ, அல்லது ஒரு அமைப்பையோ உருவாக்க வேண்டியது அரசின் கடமை. அதை விட்டு விட்டு ஒட்டு மொத்தமாக திடீரென அந்தஸ்தையே ரத்து செய்வதால் என்ன பயன்? லட்சக்கணக்கான மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு தான் பறி போகும். தமிழகத்தில் ஒரு அரசு பல்கலைக் கழக துணைவேந்தர் மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. அந்த பல்கலைக் கழகத்தின்  அந்தஸ்தை பல்கலைக் கழக மானியக்குழு ரத்து செய்யுமா? அல்லது அந்த பல்கலைக் கழகத்திற்கு மானியம் வழங்குவதை நிறுத்துமா? அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் எப்படி நியமிக்கப்படுகின்றனர்? அதை பல்கலைக் கழக மானியக்குழு கண்காணிக்கிறதா? தமிழக கவர்னராக சென்னா ரெட்டி இருந்த போது, தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக் கழகங்களிலும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கும் தமிழக பல்கலைக் கழகங்களுக்கும் என்ன தொடர்பு? வங்கிகளில் கடன் வாங்கி, சொந்த பணத்தைப்போட்டு கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவில் உறவினர்களைத் தான் நியமிப்பார்கள். அரசு விதிகளின் படி கல்லூரிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறதா? பட்டம் வழங்கப்படுகிறதா? மாணவர்கள் சேர்க்கை முறையானதாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஏற்பாடு செய்யாமல் பல்கலை அங்கீகாரத்தையே ரத்து செய்வது கேலிக்கூத்தானது. யாருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்? பல்கலை அங்கீகார பிரச்னையில் போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள், தாங்கள் படித்த கல்லூரிகளையே அடித்து நொறுக்குகின்றனர். அவர்கள் தங்கள் கோபத்தைக் காட்ட வேண்டியது மத்திய அரசு மீது தான் அல்லது அவர்களை இந்த கல்லூரிகளில் சேர்த்த அவர்கள் பெற்றோர் மீது தான். ‘எங்கள் பல்கலைக் கழகத்தில் தான் சேர வேண்டும்’ என எந்த பல்கலைக் கழகமும் மாணவர்களை வற்புறுத்தவில்லை. மாணவர்கள் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக் கழகம் போன்ற சிறந்த பல்கலைக் கழகங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இலவசமாக படிக்க இடம் கிடைத்து இருக்கும். மாணவர்கள் தங்கள் மீது குற்றத்தை வைத்துக் கொண்டு பல்கலைக் கழக நிர்வாகம் மீது வெறுப்பைக் காட்டுவது எந்த வகையில் நியாயம்? இதனால் ஏற்படும் சேதத்துக்கும் சேர்த்து பின்னர் மாணவர்களிடமே பல்கலைக் கழக நிர்வாகங்கள் வசூல் செய்து விடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்