மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மையத்தில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டத்திற்கான பயிற்சி வகுப்பை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று துவங்கி வைத்தார்.பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் பராமரிப்புக்கு, முதல்வர் ஸ்டாலின், 1.90 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மழையில் நனைந்த புத்தகங்களுக்கு மாற்றாக, புதிய புத்தகங்கள் இன்றும், நாளையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மழை பெய்த நான்கு மாவட்டங்களிலும், பள்ளிகளின் கட்டடங்கள் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்பதை அறிய, 20 வகையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள 4,435 பள்ளிகளில் இன்னும், 32 பள்ளிகளில் பராமரிப்பு பணி செய்ய வேண்டியுள்ளது. ஆறு பள்ளிகளில் தேங்கியுள்ள தண்ணீரை, தனி கவனம் செலுத்தி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.