உள்ளூர் செய்திகள்

குறைபாடுகளை தூக்கி எறியுங்கள்!

நாம் வெற்றியடையவே பிறந்திருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு போன்ற சின்ன சின்ன தோல்விகளுக்கெல்லாம் எதிர்மறை எண்ணத்தோடு தவறான முடிவுக்கு செல்லக்கூடிய மாணவர்களை பற்றிய செய்திகளை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருபுறம் மரணத்தை தள்ளி போட மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறமோ அர்த்தமின்றி மரணத்தை தேடிக் கொள்ளும் தன்னம்பிக்கையற்ற பரிதாபத்துக்குரிய இளைஞர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை கடினமானது தான், ஆனால், வெற்றிக்கான வழி அங்கே தான் இருக்கிறது என்கிறார் உலகப் புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ். இவர் காலத்தை வென்ற மாமேதை. தனது 21ஆவது வயதில் கல்லூரிக்குச் செல்லும்போது ஷூ லேஸ் கட்டுவதற்குச் சிரமப்பட்டார். இதை கவனித்த அவர் தந்தை ஹக்கிங்ஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் ஹாக்கிங்ஸை பரிசோதனை செய்துவிட்டு சொன்னார். நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் உங்களை தாக்கியுள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும். இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.அப்போது ஹக்கிங்ஸ் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லாமல் இந்த நோய் எனது உடலை பாதிக்குமா அல்லது என்னுடைய முளையை பாதிக்குமா என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார்.உடனே ஹக்கிங்ஸ் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை எனது உடலா செய்யப்போகிறது எனது மூளை தானே ஆராய்ச்சிக்கு உதவ போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். அதன் பிறகு நவீன அறிவியல் பற்றி, தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரஸ்யமான புத்தகங்களாக எழுதினார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல்சேரில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்தது. இரண்டு விரல்கள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் இழக்கவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.இரண்டே வருடத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஸ்டீபன் ஹக்கிங்ஸ், பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார் என்றால், அவர் மரணத்தை பற்றி பயம்கொள்ளாமல் தனது மன உறுதியின் மேல் நம்பிக்கை கொண்டு இருந்ததே. ஆனால் நம்மில் பலர் நோய்வாய்ப்பட்டாலோ, ஏன் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டால் கூட துடித்து துவண்டு போகிறார்கள். காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் வாழப்பழகு,.. போராடு... துன்பங்களை தூக்கி எறி... வெற்றியை நோக்கிப் புறப்படு, ஆகியவை தான்.எதைக் குறைபாடு என்று நினைக்கின்றோமோ அதுவல்ல குறைபாடு. உன் கடமையை செய்யாமல் பலனை எதிர்பார்ப்பதுதான் குறைபாடு. உனக்குப் பிடித்த விஷயத்தை பிறருக்குப் பிடிக்காததால் செய்யத் தயங்கினால் அதுதான் குறைபாடு. நீ வாழ்ந்து கொண்டிருப்பது உன் வாழ்க்கை, உனக்காக வாழ். பிறருக்கு உதவி செய். இந்த உலகம் உனக்காக தான் உருவாக்கப்பட்டுள்ளது.உனக்கு தேவையான ஒன்றை நீ தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். குறைபாடுகள் உடலில் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் ஏற்பட்டுவிடாமல் எப்போதும் உற்சாகமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். வெற்றியை நோக்கிப் புறப்படுங்கள். -பேராசிரியர், அ.முகமது அப்துல் காதர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்