கல்வித்துறை தொடர்பான படிப்புகள்
கல்வித்துறையில், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் திறன்களை மேம்படுத்தும் விதமாக, பல படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அசிம் பிரேம்ஜி பல்கலை வரவேற்கிறது. எம்.ஏ. கல்வி, எம்.ஏ. மேம்பாடு மற்றும் ஆசிரியர் கல்வியில் முதுநிலைப் பட்டம் போன்ற படிப்புகள் இந்தாண்டு ஜூலை மாதம் துவங்குகின்றன. முதல் இரண்டுவகை படிப்புகளும், கற்பித்தல் அல்லாத, அதேசமயம் கல்வித்துறை தொடர்பான மற்றும் சமூக மேம்பாடு சம்பந்தமான தொழில்களை தேர்ந்தெடுக்க மாணவர்களை தயார்படுத்துவதாகும். பிசிக்கல் அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம், சுற்றுசூழல் அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பாடங்களை படித்த பட்டதாரிகள், இந்த 3 படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். மூன்றாவது படிப்பானது கல்வியாளர்களுக்கானது. எனவே அதைப் படிக்க பி.எட். அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்புகளை படிப்பதற்கான ரெசிடென்ஷியல் வளாகம், பெங்களூர் புறநகர் பகுதியில் 2012 ம் ஆண்டு செயல்படத் துவங்கும். அதுவரை தற்காலிக இடத்தில் கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கும். இதைப்பற்றிய விரிவான விவரங்களை அறிய www.azimpremjiuniversity.edu.in என்ற வலைத்தளம் செல்லவும்.