உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றில் ஓய்வு அதிகாரி பெயர்; தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி

மதுரை: பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்தபோது ஓய்வு பெற்ற இணை இயக்குநர் செல்வக்குமார் கையெழுத்து இடம் பெற்றிருந்ததால் தலைமையாசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் மதியத்திற்கு மேல் தவறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.பிளஸ் 2 தேர்வு முடிந்து, மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக நேற்று முதல் காலை 10:00 மணிக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்தது. இதன்படி காலை 11:00 மணிக்கு மேல் தேர்வுத்துறை இணையதளத்தில் சான்றிதழ் பதவிறக்கம் செய்ய முடிந்தது.அந்த சான்றிதழில் பொதுவாக தமிழ்நாடு மாநில பள்ளித் தேர்வுகள் குழும உறுப்பினர் செயலர் (மேல்நிலைகல்வி இணை இயக்குநர்) கையெழுத்து இடம் பெறுவது வழக்கம். ஆனால் அந்த இடத்தில் செல்வக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது.இவர் 5 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர். தற்போது உறுப்பினர் செயலராக ராமசாமி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறை கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இதையடுத்து விழித்துக்கொண்ட அதிகாரிகள், செல்வக்குமாருக்கு பதில் ராமசாமி பெயரை பதிவிட்டு திருத்திய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.தொடர்ந்து மெத்தனம்இத்தேர்வு முடிவுகள் வெளியிடும் போது ஆங்கிலத்தில் சென்டம் பெற்றவர்கள் விவரம் முதலில் வெளியாகவில்லை. இதுகுறித்து விமர்சனம் எழுந்தபோது அப்பாடத்தில் சென்டம் பெற்றவர்கள் விபரம் தாமதமாக வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்காலிக சான்றிதழ் விஷயத்திலும் அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், ஓய்வு அதிகாரி பெயர் இடம் பெற்றிருந்த விஷயத்தை நாமக்கல் மாவட்ட தலைமையாசிரியர் ஒருவர் கண்டுபிடித்தார். இதன் பின் மதியம் 2:00 மணிக்கு மேல் அதில் திருத்தம் செய்யப்பட்டது.இதனால் காலை பதிவிறக்கம் செய்தவர்கள் மீண்டும் திருத்தப்பட்ட சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தியும், தற்காலிக சான்றிதழில் இணை இயக்குநர் ராமசாமி பெயர் உள்ளதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கவும் தலைமையாசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்