டாஸ்மாக் கடையை 2 தினங்களுக்குள் மூடாவிட்டால்...; கல்லுாரி மாணவியர் கெடு
பிராட்வே: கல்லுாரி அருகேயுள்ள டாஸ்மாக் கடையை இரண்டு தினங்களுக்குள் மூடாவிட்டால், பகுதிவாசிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என, கல்லுாரி மாணவியர் கெடு விதித்துள்ளனர். எச்சரிக்கை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ளது பாரதி மகளிர் கல்லுாரி, அதன் எதிரே, இப்ராகிம் சாலை சந்திப்பில், டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையால், கல்லுாரி மாணவியர் அச்சத்துடன் அந்த பகுதியை கடக்க வேண்டியுள்ளது. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மாணவர் அமைப்பு சார்பில், பலகட்ட போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் முன் முற்றுகை போராட்டம் நடத்த மாணவியர் திட்டமிட்டனர். ஆனால், பாரதி மகளிர் கல்லுாரி நிர்வாகம், மாணவியரை போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என எச்சரித்தது. மேலும், மாணவியர் யாரும் கல்லுாரியில் இருந்து வெளியேறாமல் இருக்க, கல்லுாரி வாயில் முன் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதுகுறித்து, போலீசார் கூறுகையில், "குறிப்பிட்ட டாஸ்மாக் கடை அகற்றப்படுவதற்கு ஏற்கனவே உத்தர விடப்பட்டுவிட்டது. மாற்று இடம் கிடைக்க தாமதமாவதால், உடனே டாஸ்மாக் கடை காலி செய்யமுடியவில்லை. இன்னும் சில தினங்களில் கடை காலியாகிவிடும்" என்றனர். பலமுறை கூறியும்... போராட்டம் நடத்த முயன்ற மாணவியர் கூறுகையில், "போலீசாரும், அதிகாரிகளும் கடை விரைவில் காலி செய்யப்படும் என பலமுறை கூறிவிட்டனர். டாஸ்மாக் கடை இன்னும் காலியாகவில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், பகுதிவாசிகளை திரட்டி டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றனர். பெண்கள் ஆர்ப்பாட்டம் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. மது அருந்த வருவோர், அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்லும் பெண்களை, கிண்டல், கேலி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த சீனிவாசபுரம் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பட்டினப்பாக்கம் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.