சிக்கண்ணா கல்லூரியில் 21ல் பட்டமளிப்பு விழா
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா, வரும் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் கூடத்தில் நடக்கிறது. கல்லூரி முதல்வர் பனையப்பன் தலைமை வகிக்கிறார். பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பங்கேற்று, பட்டமேற்பு விழா உரை நிகழ்த்துகிறார். விழாவில் பங்கேற்க சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பட்டம் வாங்கும் மாணவ, மாணவியர் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு அரங்கிற்கு வந்து ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும். விருந்தினர்கள், அழைப்பிதழை வரவேற்பாளரிடம் காண்பித்து, காலை 10.00 மணியளவில் தங்களது இருக்கையில் அமர வேண்டும். பட்டமளிப்பு குழு, அரங்கிற்குள் வரும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்; பட்டமளிக்கும் முதன்மை விருந்தினர் இருக்கையில் அமர்ந்த பின்பே, மற்றவர்கள் அமர வேண்டும். இதேபோல், பட்டமளிப்பு குழு விழா முடிந்து வெளியேறும் போதும், அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். விருந்தினர்கள், குழந்தைகளை விழாவுக்கு அழைத்து வரக்கூடாது. விழா அரங்கிற்குள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. தனிப்பட்ட முறையில் போட்டோ எடுக்க அனுமதியில்லை.