பீகார் சூப்பர் 30 மையத்தில் 24 பேர் தேர்வு
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான பயிற்சியை பெற வாய்ப்பில்லாத ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் சூப்பர் 30 மையத்தில் படித்த 30 பேரில் 24 மாணவர்கள், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக நூறு சதவீத வெற்றியைப் பெற்றிருந்த இந்த மையத்தில் இந்த ஆண்டு 30ல் 24 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவரை 9 ஆண்டுகளில் சூப்பர் 30 மையத்தில் படித்து, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது என்று இந்த மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆனந்த் கமார் செய்தியாளர்களிடம் கூறினார். 2,30,000 பேர் எழுதும் இந்த தேர்வை வெறும் 5,000 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். அதில் எங்கள் மாணவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிறிய தேர்வு மூலமாக இந்த இலவச பயிற்சிக்கு ஆண்டு தோறும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டு முழு நேரமும் படிப்பதற்காக செலவிட வைக்கிறோம் என்றார் ஆனந்த் குமார்.