உள்ளூர் செய்திகள்

வானவில் மன்றத்தில் அறிவியல் பழகு போட்டி

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த பாடங்களில் ஆர்வத்தை வளர்த்தும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, வானவில் மன்றத்தின் கீழ், 'அறிவியல் பழகு' போட்டிகள் நடைபெறவுள்ளன.பேரூர், காரமடை, சூலூர் உள்ளிட்ட 15 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில், அறிவியல் பயிற்சி வழங்குவதற்காக, மொத்தம் 22 மாநில கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில், அவர்கள் வாரம் ஒருமுறை சென்று, அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில், மூன்று வகை செயல்முறைப் பயிற்சி வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 'அறிவியல் பழகு' போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பள்ளி அளவிலான இந்த போட்டிகள், நவ. 11 முதல் 14 வரை நடைபெறும்.இதில் வெற்றி பெறும் மாணவர்கள், முதலில் வட்டார அளவில் பங்கேற்பர்; அதில் தேர்வானவர்கள் மாவட்ட அளவிலும், அதன் பின் மாநில அளவிலான இறுதி போட்டிகளிலும் கலந்து கொள்வர்.பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து, குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 5 குழுக்கள், 101 முதல் 300 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் 4 குழுக்கள் எனப் பிரித்து, போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மாணவர்களின் அறிவியல் சிந்தனை, செயல் திறன், மற்றும் புதுமைமிக்க சிந்தனைகளை வெளிப்படுத்தும் தளமாக அமையும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்