நாளந்தா அகழ்வாய்வில் 60 கிராமங்கள் கண்டுபிடிப்பு
பாட்னா: பழங்கால நாளந்தா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய, 200 கிராமங்களில், 60 கிராமங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மன்னர் குமார குப்தரால், ஐந்தாவது நூற்றாண்டில் துவக்கப்பட்ட, குப்தர் கால உலகப் புகழ்பெற்றது நாளந்தா பல்கலைக்கழகம். உறைவிட பல்கலைக்கழகமான இதில், கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து தங்கியிருந்து, கல்வி கற்றனர். இந்த பல்கலைக்கழகத்தை பராமரிக்க, 200 கிராமங்களில் இருந்து வரி வசூல் செய்யப்பட்டது. பீகார் மாநிலத்தில் உள்ள இந்த கிராமங்களை அகழ்வாராய்ச்சி செய்யும் பணி நடந்து வருகிறது. நாளந்தா பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய 200 கிராமங்களில், 60 கிராமங்கள் அகழ்வாய்வு செய்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பீகாரின் வரலாற்று முக்கியத்துவமான பகுதிகளில் அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் வைணவம், புத்த மதம், ஜைன மதம் ஆகிய பல பிரிவுகளைப் பின்பற்றிய சமுதாயம் ஒன்றாக இணைந்து வாழ்ந்தது தெரிய வந்திருக்கிறது. கறுப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகள், செம்பாலான கருவிகளும் கிடைத்திருக்கின்றன. இவை குறித்து மேலும் ஆய்வுகள் நடக்கின்றன.