உள்ளூர் செய்திகள்

‘ஐ.டி., துறையில் 9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு’

கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் 43வது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய மண்டல கம்ப்யூட்டர்  கூட்டமைப்பின் 25வது மூன்று நாள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் செப்., 11ம் தேதி துவக்கியது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் சந்திரமவுலி பேசுகையில், ‘சாமானிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். ஆண்டிற்கு ஒரு லட்சம் இன்ஜினியர்கள் உருவாகின்றனர். இருப்பினும், தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன் அவர்களிடம் இல்லை.  மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் போதியளவில் கிராமங்களுக்கு சென்றடையவில்லை. தற்போது, ஐந்தாயிரத்து 400 கிராமங்களில் தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இம்மையங்களுக்கான கட்டுமானங்கள் முடிவடைந்து, அடுத்தாண்டு துவக்கத்தில் செயல்படும். இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் கிராமங்களை சென்றடையும்’ என்றார். தமிழக அரசின் தலைமை செயலர் ஸ்ரீபதி மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவை மிகவும் பிரபலப்படுத்தியுள்ளது. தமிழகம் இதில் சிறந்து விளங்குகிறது. கடந்த 2000-2001ம் ஆண்டு, சாப்ட்வேர் ஏற்றுமதி 3 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பாண்டில் ஏற்றுமதி  28 ஆயிரத்து 489 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாப்ட்வேர், ஹார்டுவேர் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடும் அதிகரித்துள்ளது. ஐ.டி.,துறை மட்டும் இல்லாமல் ஆட்டோ மொபைல் துறையிலும் தமிழகம்  சிறந்து விளங்குகிறது. ஐ.டி., துறையில் 2.7 லட்சம் பேர் நேரடி வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 77 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நாஸ்காம் சர்வேயின் படி இத்துறையில் 9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் முதல் கட்டமாக ஏழு மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் முழுவதும் இந்தாண்டிற்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படவுள்ளன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஓசூர், நெல்லை ஆகிய நகரங்களில் ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. வேலூரில் ஐ.டி., பார்க்கும் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்ரீபதி கூறினார். சி.எஸ்.ஐ., ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் ஜெயராமகிருஷ்ணன் வரவேற்றார்.  சி.எஸ்.ஐ., மாநாடு குறித்து, துணை தலைவர் மகாலிங்கமும்,  எஸ்.இ.ஏ.ஆர்.சி.சி., மாநாடு குறித்து ஆஸ்திரேலியன் கம்ப்யூட்டர் சொசைட்டியின் தலைவர் பரகலகுமாரும் விளக்கினர். சி.எஸ்.ஐ.,யின் தலைவர் அகர்வால் விழாவிற்கு தலைமை தாங்கினார். மூன்று நாள் மாநாடு  குறித்து முத்துகிருஷ்ணன் விவரித்தார். விழாவில், சி.எஸ்.ஐ., 2008 ஒருங்கிணைப்பு கமிட்டியின் இணை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்