மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: நெக்ஸ்ட் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள் நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும். அதன்பின், நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளை ஆற்றவும் முடியும். இத்தேர்வு, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.