விவசாய உதவித்தொகை
சென்னை: பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில், 63,000 தமிழக விவசாயிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை, 2018 டிச., முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று தவணையாக தலா 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கென தனி இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில், முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு, உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் விடுவிக்கப்படுகிறது.தமிழகத்தில், 48.9 லட்சம் விவசாயிகள் உதவித்தொகை கேட்டு பதிவு செய்துள்ளனர். ஆனால், 13வது தவணையில், 20.29 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் உதவித்தொகை கிடைத்தது. ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யாததால், தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 14வது தவணை உதவித்தொகையை வரும் 30ம்தேதி மத்திய அரசு விடுவிக்க உள்ளது. இந்த தவணையில் தமிழகத்தை சேர்ந்த, 63,233 விவசாயிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.