பட்டமளிப்பு விழா
மதுரை: வாழ்க்கையில், சமுதாயத்தில் பிரச்னைகளை எதிர்கொண்டால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என சென்னை சோகோ கார்ப்பரேஷன் மனிதவளத்துறை தலைவர் சார்லஸ் காட்வின், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் பட்டமளிப்பு விழாவில் பேசினார். கல்லுாரியின் 24 வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் சுஜாதா வரவேற்றார். தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது:சிறந்த சமுதாயத்திற்கு உதவுங்கள்கல்வி சக்தி வாய்ந்த ஆயுதம். அதன் மூலம் ஏழ்மையை போக்கி, பாலின சமத்துவத்தை பேண முடியும். அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, சமூகவலைத் தளங்கள் என மாணவர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. இக் கல்லுாரியில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில் சார்ந்த படிப்புகளை பயிற்றுவிப்பதால் இங்கு பட்டம் பெறுவோருக்கு வேலைவாய்ப்பு உறுதி. சிறந்த சமுதாயத்தை உருவாக்க மாணவர்களின் பங்களிப்பு அவசியம். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக எங்கும் ஊழல் பரவியுள்ளது. இதில் இருந்து அரசியல்வாதிகள் மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர். ஊழலை ஒழிக்க சபதம் ஏற்போம். பணத்திற்காக உங்கள் ஓட்டை தேர்தலில் விற்காதீர்கள். சுரண்டல்வாதிகளை தவிர்த்து, சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும், என்றார்.எந்த துறையிலும் சாதிக்கலாம்சென்னை சோகோ கார்ப்பரேஷன் மனிதவளத்துறை தலைவர் சார்லஸ் காட்வின் பட்டங்களை வழங்கி பேசியதாவது: பள்ளிப் படிப்பில் நான் பின்தங்கிய மாணவனாக இருந்தேன். ஆசிரியர் தன்னம்பிக்கை அளித்ததால் வெற்றி பெற்றேன். கல்லுாரி இறுதிப் பருவ தேர்வின்போது லட்சியத்திற்கு விடை தெரியாமல் தேடலை துவங்கினேன். சாதனை படைத்தேன். வாழ்க்கையில் எந்த மனிதனோடும் நம்மை ஒப்பீடு செய்தால் வெற்றி பெறமுடியாது. பிடித்த வேலையை செய்தால் அந்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக மாறும். வாழ்க்கை, சமுதாயத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். அதையும் தாண்டி சாதிக்க முடியும். அது தொழில்நுட்பம், அரசியல் என எந்த துறையாகவும் இருக்கலாம். வேலை, பதவியை தாண்டி செய்யும் வேலையில் ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் சிறு மாற்றத்தை கொண்டுவரலாம். நாம் பணிபுரியும் இடங்களில் உத்வேகம் அளிக்கக்கூடிய ஆளுமைகள் இருப்பர். அவர்கள் நாம் அடுத்த கட்டமாக சாதிக்க உதவுவர். இது என்ன வாழ்க்கை என நினைப்பதை தவிர்த்து, இது என்னுடைய வாழ்க்கை என நினைத்து செயல்பட்டால் சாதிக்க முடியும், என்றார். கல்லுாரிச் செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, டீன் பிரியா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி, எம்.பி.ஏ.,துறைத்தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.