உள்ளூர் செய்திகள்

பிராம்ட் இன்ஜினியரிங்

செயற்கை நுண்ணறிவு (AI), 2026ம் ஆண்டின் தொழில்நுட்ப உலகில், ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக மாறியுள்ளது. சாட் ஜி.பி.டி., ஜெமினி மற்றும் குரோக் ஏ.ஐ., போன்ற ஏ.ஐ.,கள் நம் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டன. இந்த ஏ.ஐ.,களிடம் இருந்து சரியாகக் கேள்விகள் கேட்டு, எதிர்பார்த்த துல்லியமான பதில்களைப் பெறுவதே ஒரு சவால்தான். இவ்வாறு கேள்விகளைக் கேட்டு சரியான பதிலை ஏ.ஐ.,யிடமிருந்து பெறுவது தான் பிராம்ட் இன்ஜினியரிங் எனப்படும். மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று. நாம் ஏ.ஐ.,க்குக் கொடுக்கும் உள்ளீடுகளை “பிராம்ட்” (Prompt) என்று அழைக்கிறோம். பிராம்ட் இன்ஜினியரிங் என்பது, ஏ.ஐ.,களுடன் சிறந்த முறையில் உரையாடுவதற்கான கலை மற்றும் அறிவியல் ஆகும். இந்த பிராம்ட்களை மிகத் துல்லியமாகவும், தெளிவாகவும், சிறப்பாகவும் வடிவமைத்து, ஏ.ஐ.,யிடமிருந்து மிகவும் பயனுள்ள மற்றும் தேவையான வெளியீடுகளைப் பெறுவதே பிராம்ட் இன்ஜினியரின் பணி.12ம் வகுப்புக்குப் பிறகு, கணினி அறிவியல், டேட்டா சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற இளங்கலைப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். இந்தப் படிப்புகளின் போது ஏ.ஐ., மற்றும் மெஷின் லேர்னிங் குறித்த பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம். நாஸ்காம் பியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் (NASSCOM FutureSkills Prime) இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் ஒரு டிஜிட்டல் கற்றல் தளமாகும். இதில் ஏ.ஐ., மற்றும் மெஷின் லேர்னிங் மட்டுமல்லாமல், பிராம்ட் இன்ஜினியரிங் குறித்த அடிப்படைப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் சலுகைக் கட்டணத்தில் அல்லது சில சமயங்களில் இலவசமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.கூகுள், மைக்ரோசாப்ட், ஓப்பன் ஏ.ஐ., அமேசான், போன்ற முன்னணி நிறுவனங்களின் ஏ.ஐ.,களான ஜெமினி, கோப்பைலட், சாட் ஜி.பி.டி., அலெக்சா, ஆகியவற்றின் சேவைகளை மேம்படுத்த பிராம்ட் இன்ஜினியர்களை நியமித்து வருகிறது.மேலும் இந்த துறை மற்ற தொழில்நுட்பத் துறைகளைப் போல அதிக புரோகிராமிங் அறிவு தேவையில்லாத ஒரு துறை. புரோகிராமிங் திறனை விட, ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் மொழியறிவு இந்தப் பணிக்கு மிக முக்கியம். இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருவதால், சரியான திறன்களை வளர்த்துக் கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்