உள்ளூர் செய்திகள்

குரு சாமி

நம் வாழ்க்கையில் சிலர் நம்முடன் எப்போதும் இருப்பதில்லை. ஆனால், நாம் யாராக மாறினோம் என்பதில் அவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கும்.பள்ளியை விட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிடும். நண்பர்களின் பெயர்கள் கூட மறந்துபோகலாம். ஆனால், சில ஆசிரியர்களின் முகமும், அவர்கள் சொன்ன சில வார்த்தைகளும் மட்டும் மனதில் அப்படியே இருக்கும்.“நீ இதைச் செய்ய முடியும்” என்று, நாம் நம்மை நம்புவதற்கு முன்பே நம்மை நம்பியவர்கள் ஆசிரியர்கள்.அவர்கள் பாடங்களை மட்டும் கற்றுத் தரவில்லை. தவறு செய்தால் திருத்தினார்கள்; தோற்றால் துவள வேண்டாம் என்றார்கள்; வெற்றி பெற்றால் தலைக்கனம் வேண்டாம் என்றார்கள். புத்தக அறிவுடன், வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதையும் உருவாக்கினார்கள்.ஒரு மாணவன் உயரும்போது, அந்த வெற்றிக்குப் பின்னால் அவனை நம்பிய ஒரு ஆசிரியரின் நம்பிக்கையும் இருக்கும். அதேபோல், தன்னிடம் படித்த மாணவர்கள் உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதுதான் ஒரு ஆசிரியரின் மிகப்பெரிய பெருமை.காலம் மாறலாம். வகுப்பறைகள் மாறலாம். கற்றல் முறைகள் மாறலாம். ஆனால், ஒரு நல்ல ஆசிரியரின் தாக்கம் மட்டும் காலாவதியாகாது.பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஆசிரியரைத் தேடி வரும் மாணவர்கள்; தங்கள் மாணவர்களின் சாதனையை பெருமையுடன் சொல்லும் ஆசிரியர்கள்; காலத்தைத் தாண்டி தொடரும் அந்த உறவு...ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பல துறைகளில் சாதித்தவர்களும், அவர்களின் வாழ்க்கையில் தடம் பதித்த ஆசிரியர்களும் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள், அனுபவங்கள் மற்றும் நன்றியுணர்வின் தொகுப்பு இது.மறக்க முடியாதவர்மகாலிங்கம், பல்லடம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்:எத்தனையோ மாணவர்கள் நம்மிடம் படித்தாலும், ஒரு சிலரை மட்டும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அவ்வகையில், என்னிடம் பிளஸ் 2 படித்த ஆனந்தகுமார் என்றும் நினைவில் நிற்கும் மாணவர்.மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். எளிமையும் நேர்மையும் அவரது தனிச்சிறப்புகள். தற்போது ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி இயக்குனராக உள்ளார். தான் இந்த நிலைக்கு உயர்வதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்று அடிக்கடி கூறுவார்.சமீபத்தில் குடும்பத்துடன் பல்லடம் வந்து என்னைச் சந்தித்தபோதும், ஆசிரியர் மீதான அதே மரியாதையுடன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உயர் பொறுப்பில் இருந்தாலும், ஆசிரியரை மதிக்க வேண்டும் என்ற பண்பை அவர் விட்டுவிடவில்லை. ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆனந்தகுமார் சிறந்த உதாரணம். அவரது நேர்மையான பணியும், ஆசிரியர் என்ற முறையில் எங்களுக்குப் பெருமை அளிக்கிறது.ஆசிரியரின் பெருமைராஜா, உடற்கல்வி ஆசிரியர், வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம்:மைதானம் என்பது வெறும் விளையாட்டு இடமல்ல; மாணவர்களின் உடலையும் மனதையும் வடிவமைக்கும் இடம். ஆசிரியரின் பயிற்சி, மாணவனின் கனவை நனவாக்க வேண்டும்.நான் சுப்பையா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது,என்னிடம் பயிற்சி பெற்ற சய்யது முஹம்மது புஹாரி, பள்ளிக் காலத்தில் மாவட்டத்தின் சிறந்த வாலிபால் வீரராகவும், அணியின் கேப்டனாகவும் இருந்தார். இன்று மருத்துவ நிபுணராக உள்ளார்.மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தவுடன் என்னைச் சந்தித்து ஆசி பெற்றார். “எனது உடலுக்கும் மனதுக்கும் வலு சேர்த்த உங்களை மறக்கமாட்டேன்” என்றார். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?இன்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம்களும் நடத்துகிறார். அவரது மனிதநேய சேவையைப் பார்க்கும் போது ஆசிரியராக எனக்குப் பெருமையாக உள்ளது.சாதித்த சூரியன்கவிதா, உடற்கல்வி ஆசிரியர், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி:அவிநாசியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குடும்பத்தின் மூத்த மகன் சூரிய பிரகாஷ். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார்.மாணவர்களின் தனித்திறமையைக் கண்டறியும் 'பேட்டரி டெஸ்ட்' மூலம் குண்டெறிதலில் அவரது திறமை வெளிப்பட்டது. தொடர்ந்து பயிற்சி அளித்து, மாவட்ட மற்றும் தென் மாநிலப் போட்டிகளுக்குத் தயார்படுத்தினோம். மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்று, தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றார். தேசிய அளவிலும் தங்கம் வென்று சாதித்தார்.ஆனால், தேசிய வீரருக்குத் தேவையான உணவு, உடை, பயிற்சி வசதிகள்கூட அவரது குடும்பச் சூழலால் கிடைக்கவில்லை. வறுமை அவரது திறமைக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதால், தன்னார்வ அமைப்புகள் மூலம் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்தோம்.பின்னர் சென்னை லயோலா கல்லுாரியில் விளையாட்டு ஒதுக்கீட்டில் பட்டம் மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார். தற்போது போபாலில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார்.வறுமையை வென்று சாதிக்க முடியும் என்பதற்கு சூரிய பிரகாஷ் ஒரு சிறந்த உதாரணம்.மனிதநேய மருத்துவர்சிவகுமார், ஆசிரியர், பொங்கலுார்:எனது மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவர் சரவணமூர்த்தி. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்; பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பார்.பின்னர் மருத்துவம் படித்து, இந்திய ராணுவத்தில் மருத்துவராகவும், சில காலம் அரசு மருத்துவராகவும் பணியாற்றினார். தற்போது பொங்கலுாரில் 'கிளினிக்' நடத்தி வருகிறார்.மருத்துவமனை என்றால் 24 மணி நேரமும் நோயாளிகளுக்காகத் தயாராக இருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. அதன்படியே கிளினிக் வளாகத்திலேயே தங்கி, எந்த நேரத்திலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறார்.அதுமட்டுமல்லாமல், 'ஞானாலயம்' என்ற பெயரில் 25 லட்சம் ரூபாய் செலவில் நுாலகம் அமைத்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் தேவையான புத்தகங்களைப் பதிவு செய்தால், நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வசதியும் உள்ளது.ஒரு நல்ல மருத்துவராக மட்டுமல்லாமல், மனிதநேயமும் வாசிப்பு நேசமும் கொண்ட மனிதராக அவர் உருவாகியிருப்பது ஆசிரியர் என்ற முறையில் எனக்குப் பெருமை.மீண்ட மாணவன்தங்கராஜன், தனியார் டுடோரியல் கல்லுாரி முதல்வர்திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால், பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிளஸ் 1 படிப்பையும் பாதியில் நிறுத்தினார்.கடந்த 2001ம் ஆண்டு எனது கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து வழிகாட்டியதில், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். பின்னர் எம்.பி.ஏ., எல்.எல்.பி., படித்து, இன்று வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்க ஆலோசகராகவும் உள்ளார். சொந்தமாக ஆடை உற்பத்தி நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.இன்றும் எங்கள் குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்கிறார். என்னிடம் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த ஏராளமான மாணவர்களில் அவரும் ஒருவர்.தன்னிடம் படித்த மாணவன் வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டியிருக்கிறான் என்பதே ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம்.செதுக்கிய ஆசிரியர்கள், வெற்றியின் வேர்கள்மெஜஸ்டிக் கந்தசாமி, தலைவர், பின்னலாடை ஏற்றுமதி நிறுவன குழுமம்:திருப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்து, பொள்ளாச்சியில் பாலிடெக்னிக் படித்தபோது எனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் மோதிராம். மாணவர்கள் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வர வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கண்டிப்புடன் இருந்தார். தாமதமாக வந்தால் ஒரு ரூபாய் அபராதம். அன்றைய காலத்தில் அது பெரிய தொகை. அபராதம் கட்ட வேண்டியதால் சில நாட்களில் காலை உணவைக்கூட தவிர்த்திருக்கிறேன்.ஆனால், அவர் கற்றுக் கொடுத்தது நேரம் தவறாமை மட்டுமல்ல. எந்தச் செயலையும் தெளிவாகச் செய்ய வேண்டும்; யாரையும் ஏமாற்றக் கூடாது; நியாயப்படி நடக்க வேண்டும் என்பதே அவரது வாழ்க்கைப் பாடம்.படிப்புக்குப் பிறகு திருப்பூரில் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டேன். ஆர்டர்களைப் பெறுவதிலும், உற்பத்தி செய்து கொடுப்பதிலும் நேரம் தவறாமையையும் நேர்மையையும் கடைப்பிடித்தேன். அதுவே தொழிலில் வெற்றிக்கு அடித்தளமானது. பின்னர் ஏற்றுமதித் துறையிலும் கால்பதித்து வெற்றி பெற்றேன்.எனது தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ஆசிரியர் அன்று கற்றுக் கொடுத்த தெளிவு, நேரம் தவறாமை, நேர்மை மற்றும் நியாயம்தான்.ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியம். குருவை மதித்து மரியாதை செய்பவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.விதைத்த நம்பிக்கைடாக்டர் ராஜ்குமார், இந்திய மருத்துவர் சங்க பொதுக்குழு உறுப்பினர்:திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தபோது, எனக்கு ஆங்கில ஆசிரியராகவும் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தவர் தர்மலிங்கம். மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் அவர் சிறந்த முன்மாதிரி.அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால், பலரும் அது முடியாத காரியம் என்பதுபோல் எதிர்மறையாகப் பேசினர். அந்த நேரத்தில் தர்மலிங்கம் ஆசிரியர்தான், “உன்னால் நிச்சயமாக முடியும்” என்று எனக்குள் நம்பிக்கையை விதைத்தார்.மருத்துவம் படிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் செய்தார். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கையொப்பம்கூட அவரிடம்தான் பெற்றேன்.அவர் அளித்த ஊக்கம்தான் இன்று நான் மருத்துவராக இருப்பதற்கான முக்கியக் காரணம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களில் ஒருவர் தர்மலிங்கம் ஆசிரியர்.திரைப்பயண அடித்தளம்கமலக்கண்ணன், திரைப்பட இயக்குனர்:என் தாயாரே தமிழாசிரியர் என்பதால், சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கமும் இலக்கிய ஆர்வமும் இருந்தது. பள்ளிப் பருவத்தில் தமிழாசிரியர்கள் அளித்த ஊக்கத்தால், கதை, கட்டுரை, கவிதை எழுதவும், மேடைகளில் பேசவும் ஆர்வம் அதிகரித்தது.வாசுகி கல்லூரியில் படித்தபோது கந்தசாமி சார் எடுக்கும் வகுப்புகளைத் தவறவிட மனம் வராது. பின்னர் ஹிந்துஸ்தான் கல்லுாரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தபோது, தமிழாசிரியர் மணிவண்ணன் சார் எனது சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.கம்பராமாயணத்தை ஒரு திரைக்கதை போலவும், காட்சிப்படுத்தும் முறையிலும் அவர் கற்பிப்பார். அதுவே சங்க இலக்கியங்களை ஆழமாகப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவரது கற்பித்தல் முறையே சினிமாத் துறையில் கால்பதிக்க எனக்கு ஒரு துாண்டுகோலாக அமைந்தது.விளம்பரத் துறையில் பணியாற்றியபோதும் அவர் எனக்கு ரேடியோ ஜிங்கிள்ஸ் எழுதிக் கொடுத்தார். கடந்த 2009-ம் ஆண்டிலேயே, நான் நிச்சயம் படம் எடுப்பேன் என நம்பி எனக்காகப் பாடல் எழுதினார். எனது 'குரங்கு பெடல்' படத்துக்கும் பாடல் எழுதினார்.நான் அவருக்கு வாய்ப்பு தரவில்லை; அவர்தான் எனக்கு வாய்ப்பையும் நம்பிக்கையையும் தந்தார். என் திரைப்பயணத்துக்கு அடித்தளம் அமைத்தவர்கள் என் தமிழாசிரியர்கள்தான்.இறைவனாய் குருபெர்னார்டு அந்தோணிசாமி,முன்னாள் தலைவர், திருப்பூர் பில்டர்ஸ் கிளப்:மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த காலத்து ஆசிரியர் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. வரலாற்று ஆசிரியர் சிவசுப்பிரமணியம் திட்டியது, கணக்கு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என் குறும்புகளுக்காக தலைமையாசிரியரிடம் அழைத்துச் சென்றது, ரத்தினம் ஆசிரியரைக் கண்டாலே பயந்து ஓடியது என பல நினைவுகள் உள்ளன.ஆசிரியர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன். ஆனால், அவர்களின் கண்டிப்பும் தண்டனையும் நம்மை பக்குவப்படுத்தும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.கோவை அரசு கலைக் கல்லுாரியில் பி.காம்., முடித்து, 10 ஆண்டுகள் ஆடிட் அலுவலகத்தில் பணியாற்றினேன். பின்னர் கட்டடத் துறையில் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டு, பல கட்டடங்களைக் கட்டி, திருப்பூர் பில்டர்ஸ் கிளப்பின் தலைவராக உயர்ந்தேன்.பள்ளியில் எவரைக் கண்டு பயந்து ஓடினேனோ, அந்த ரத்தினம் ஆசிரியரையே பின்னாளில் நான் கட்டிய பங்களாவுக்கு அழைத்து வந்து, ஒரு வாரம் தங்க வைத்து உபசரித்தேன். அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றேன்.'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.வாழ்க்கை ஆர்கிடெக்ட்கள்உமாசங்கர், கட்டடவியல் நிபுணர்:ஒரு கட்டடத்துக்கு உறுதியான அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல என் கல்வி, தொழில், வாழ்க்கை வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் அமைத்த அடித்தளம் மிக முக்கியம்.11 மற்றும் 12ம் வகுப்புகளில் எனக்கு வழிகாட்டிய கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர், படிப்பின் அவசியத்தையும் அதை தீவிரமாக அணுக வேண்டியதையும் புரியவைத்தார். ஒவ்வொரு மாணவரின் திறமையையும் குறைகளையும் கண்டறிந்து தனிப்பட்ட அக்கறை காட்டுவார். அவரது கண்டிப்பு என்னுள் ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் விதைத்தது.கணக்கு ஆசிரியர் செல்வம் சார், கடினமாகத் தோன்றிய கணிதத்தை எளிமையாக்கியவர். கணிதப் பயத்தைப் போக்கியதோடு, எந்தப் பிரச்னையையும் பொறுமையாக அணுகினால் தீர்வு உண்டு என்ற வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்தார்.ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களை நாம் மறந்துவிடலாம். ஆனால், அவர்கள் விதைத்த தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுப்புணர்வு போன்ற பண்புகளை ஒருபோதும் மறக்க முடியாது.என் வாழ்க்கையை வடிவமைத்த உண்மையான 'ஆர்கிடெக்ட்'கள் என் ஆசிரியர்கள் தான்.ஒழுக்கத்துக்கான வழிகாட்டிகதிரவன், எலாஸ்டிக் உற்பத்தி நிறுவன நிறுவனர்:பழநி அருகேயுள்ள ஒரு சிறிய விவசாய கிராமம்தான் என் சொந்த ஊர். எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். பழனியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, படிப்பில் நாட்டம் இல்லாததால் கல்வியைத் தொடரவில்லை.ஆனால், பள்ளி ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்தான் என்னைத் தொடர்ந்து வழிநடத்தின. என் வகுப்பாசிரியர் சாமுவேல், பாடங்களோடு நல்லொழுக்கம், தூய நடத்தை, கண்ணியம் உள்ளிட்ட பண்புகளையும் கற்றுக் கொடுத்தார். மற்ற ஆசிரியர்களும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களைப் புரியவைத்தனர்.கடந்த 1991ம் ஆண்டு வேலை தேடி திருப்பூருக்கு வந்தேன். முதலில் பிரிண்டிங் நிறுவனத்தில் ஹெல்பராக வேலை செய்தேன். பின்னர் நிட்டிங் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்து, எட்டு ஆண்டுகள் பணியாற்றி உயர் பதவி வரை உயர்ந்தேன்.பின்னர் வெளியே வந்து 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய அளவில் தொழில் தொடங்கினேன். இன்று தென் மாநில அளவில் தலைசிறந்த எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கியுள்ளேன்.எனது வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஒழுக்கம், மரியாதை, அன்பு போன்ற பண்புகள்தான். எனது வாழ்க்கை வளர்ச்சிக்கான அடித்தளமே ஆசிரியர்கள் அன்று அமைத்ததுதான்.நேர்மையின் பாடம்செந்தில்குமார், பெட்ரோல் பங்க் உரிமையாளர், பொங்கலுார் கவுண்டம்பாளையம்:பெருந்தொழுவு அரசு பள்ளியில் படித்தபோது, எனக்கு தமிழாசிரியராக இருந்தவர் பழனிசாமி. ஏழ்மையிலும் நேர்மையாக இருக்க வேண்டும்; எந்த நிலையிலும் பொய் சொல்லக்கூடாது என்பதை எப்போதும் வலியுறுத்துவார்.ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரையே உதாரணமாகச் சொல்லலாம். திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்க்கைப் பாடங்களை எளிமையாகப் புரிய வைப்பார். ஒவ்வொரு மாணவரும் நன்றாகப் படித்து உயர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்.வகுப்பறையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நியாயம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தவர். அவர் இன்று உயிருடன் இல்லாவிட்டாலும், அவர் கற்றுத் தந்த நற்பண்புகளும் நினைவுகளும் என்றும் என்னுடன் இருக்கும். அப்படிப்பட்ட ஆசிரியரை ஒருபோதும் மறக்க முடியாது.கண்டிப்பே கல்விடெக்ஸ்டைல் வர்த்தகர் மற்றும் ஆலோசகர் வெங்கட்:கொங்குமெயின் ரோடு வெங்கடாசலபதி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றேன். தலைமை ஆசிரியர் அமானுல்லா, ஆசிரியைகள் சுப்புலட்சுமி, விக்டோரியா ஆகியோரின் கண்டிப்பும், கற்பிக்கும் முறையும் என்னை பக்குவப்படுத்தின.பின்னர் சின்னசாமி அம்மாள், நஞ்சப்பா பள்ளிகளில் படித்தேன். தலைமை ஆசிரியர் நாகராஜ் எனது ரோல் மாடலாக இருந்தார். கணித ஆசிரியர் ரகுநாதன், ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் பாடங்களை எளிதாக புரிய வைத்தனர்.தொடக்கக் கல்வியே வாழ்க்கையின் அடித்தளம். அந்தக் காலத்தில் ஆசிரியர்களை குருவாக மதித்தோம். மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களே முக்கியம். எனது வாழ்க்கையின் சிற்பிகளான ஆசிரியர்களின் அறிவுரை இன்றும் என்னை வழிநடத்துகிறது.மாறாத குரு - சிஷ்ய பந்தம், கண்டிப்பின் பலன்பாலமுருகன், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.குமார் நகர் அரசு பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, சிக்கண்ணா கல்லூரி என எனது கல்விப் பயணம் அமைந்தது. பள்ளிப் பருவத்தில் என்னை வடிவமைத்த பல ஆசிரியர்களை இன்றும் மறக்க முடியாது.இரண்டாம் வகுப்பில் என் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியை, பாசத்துடன் எனக்கு மிலிட்டரி உடை வாங்கித் தந்தது இன்னும் நினைவில் உள்ளது. ஆறாம் வகுப்பில் துரைசாமி சார் நண்பரைப் போல பழகுவார். சவுந்தரராஜன், பெரியசாமி, சபி, மாலதி உள்ளிட்ட ஆசிரியர்களும் என் மனதில் நிற்பவர்கள்.11 மற்றும் 12ம் வகுப்பில் எங்களுக்கு பாடம் நடத்திய துரைசாமி ஆசிரியரின் கம்பீரமான கற்பித்தல் பாணி மறக்க முடியாதது. ஆசிரியர் சுப்பிரமணியனின் நேரம் தவறாமையும் கண்டிப்பும் இன்றும் நினைவில் உள்ளன.சிறுவயதில் ஆசிரியர்கள் விதைத்த ஒழுக்கம், நற்பண்புகள், கண்டிப்பு, கட்டுப்பாடு ஆகியவைதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன. நேரம் தவறாமை, பிறருக்கு உதவும் குணம், ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகிய பள்ளிப் பாடங்கள்தான் சட்டமன்றப் பணிகளிலும் என்னை நேர்த்தியாக செயல்பட வழிகாட்டுகின்றன.ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் துரைசாமிதிருப்பூர் நஞ்சப்பா பள்ளியில் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆசிரியராகவும், பின்னர் தலைமையாசிரியராகவும் பணியாற்றினேன். பள்ளிக்குள் எந்த மாணவனும் கெட்டவன் அல்ல; அவர்களைப் புரிந்து கொண்டு செம்மைப்படுத்தி நல்வழிப்படுத்துவதே ஆசிரியரின் கடமை.11ம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு உடனடியாகப் பாடம் நடத்தமாட்டேன். முதல் சில நாட்கள் அவர்களின் குடும்பச் சூழல், வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்து கொண்டு மனதைப் பக்குவப்படுத்துவேன். அதன் பிறகே பாடங்களைத் தொடங்குவேன்.பாலமுருகன் படித்த 'பேட்ச்' கலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுடன் செயல்பட்டது. பாலமுருகன் கடின உழைப்பாளி. ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்து, தொடர் உழைப்பாலும் தெளிவான இலக்காலும் இன்று எம்.எல்.ஏ.,வாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எந்த விஷயத்தில் முன்னேற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்காகத் தொடர்ந்து பயணித்தால் வெற்றி நிச்சயம்.வாழ்க்கை வழிகாட்டிபிளோமின்ராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், திருப்பூர்திருப்பூர் கே.எஸ்.சி. பள்ளியில் வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆசிரியராகப் பணியாற்றினேன். பல மாணவர்களுக்குக் கற்பித்திருந்தாலும், குறிப்பிடத்தக்க மாணவர்களில் ஒருவர் சந்திரகுமார்.வகுப்பில் பாடங்களை உன்னிப்பாகக் கவனிப்பார். பெரியவர்களிடம் மரியாதை, நண்பர்களிடம் அன்பு என எல்லா விதத்திலும் சிறந்த மாணவர். குறிப்பாக கணக்குப் பதிவியலில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த அறிவும் கொண்டவர். எந்தக் கணக்கையும் எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிப்பார்.சந்திரகுமார், ஆடிட்டர், திருப்பூர்மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த நான், கே.எஸ்.சி. பள்ளியில் பிளஸ் 2 படித்தேன். அப்போதே ஆடிட்டராக வேண்டும் என்ற இலக்குடன் இருந்தேன். அதற்கு ஆசிரியர் பிளோமின்ராஜ் சார் அளித்த ஊக்கமும் வழிகாட்டுதலும் முக்கியமானது.47 மாணவர்கள் இருந்த வகுப்பில் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து பாடம் நடத்துவார். அவர் கற்றுக் கொடுத்த பாடங்கள் கல்லூரி வரை எங்களுக்கு வழிகாட்டின.தமிழ் வழியில் படித்த நாங்கள், கல்லூரியில் தைரியமாக ஆங்கில வழி பி.காம்., படிக்க அவரது பயிற்சி உதவியது. பின்னர் சி.ஏ., முடிப்பதற்கும் அவரது வழிகாட்டுதல் உறுதுணையாக இருந்தது.இன்றும் ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் நண்பர்கள் அனைவரும் அவரை நேரில் சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.ஒழுக்கம் உயர்த்தும்துரைசாமி, 78, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்செவந்தாம்பாளையம் ஸ்ரீசெல்வ விநாயகர் கல்வி நிலையத்தில் மாணவராகப் படித்து, பின்னர் அதே பள்ளியில் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியது என் வாழ்வின் பெருமை.மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம் என்பதால் கண்டிப்புடன் வழிநடத்துவேன். அதே நேரத்தில் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர மாணவர் மன்றம் அமைத்தோம்.நிதி, உணவு, சுகாதாரம், கல்வி என பல துறைகளுக்கு மாணவர்களையே பொறுப்பாளர்களாக நியமித்தோம். அவர்கள் பணிகளை மற்ற மாணவர்கள் கேள்வி கேட்கும் வகையில் மாதாந்திரக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.அந்த நிர்வாகப் பயிற்சியின் மூலம் பல மாணவர்கள் இன்று தொழிலதிபர்களாகவும் அதிகாரிகளாகவும் உயர்ந்துள்ளனர். குறிப்பாக, அப்போது நிர்வாகப் பணிகளில் துடிப்பாக செயல்பட்ட லோகநாதன், இன்று 2,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.லோகநாதன், 57, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்:துரைசாமி ஆசிரியர், அதே பள்ளியில் மாணவராகப் படித்து, பின்னர் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் உயர்ந்து பள்ளியை வழிநடத்தியவர். அவர்தான் எங்களது உண்மையான 'ரோல் மாடல்'.வகுப்பறைக் கல்வியைத் தாண்டி, மாணவர் மன்றம் மூலம் ஒவ்வொரு துறைக்கும் எங்களுக்குப் பொறுப்புகளை வழங்கி நிர்வாகத் திறனை வளர்த்தார். அந்த அனுபவம்தான் வாழ்க்கையிலும் தொழிலிலும் வழிகாட்டியது.ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. பின்னர் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று, கூட்டு சேர்ந்து சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். இன்று 2,000 பேர் பணியாற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.ஆனால், நான் படித்த ஸ்ரீசெல்வ விநாயகர் கல்வி நிலையத்தின் செயலாளராக இருந்து நிர்வகிப்பதுதான் எனக்கு மிகப்பெரிய பெருமை. சிறுவயதில் பெற்ற உறுதியின்படி, இன்று அந்தப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன்.கனவுக்கு துணைகுணசேகரன், தலைமையாசிரியர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ளேன். கல்வி கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் சிறக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் உழைக்கின்றனர்.பெற்றோருக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு நல்வழி காட்டுபவர்கள் ஆசிரியர்கள். எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து, கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களுக்கு அடிமையாகாமல், தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்தால் வாழ்க்கையில் நிச்சயம் உயர முடியும்.எங்கள் பள்ளியில் படித்த வினோதா, ஸ்ரீமதி, ஸ்ரீநிதி, காஞ்சனா உள்ளிட்ட மாணவியர் சிறப்பாகப் பயின்று இன்று எம்.பி.பி.எஸ்., படித்து வருவது பெருமையாக உள்ளது. இதேபோல் பல மாணவர்களும் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.வினோதா, இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி:பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, 2023-24ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினேன். டாக்டராக வேண்டும் என்பது என் சிறுவயது லட்சியம். அந்தக் கனவை நனவாக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல் பெரும் உறுதுணையாக இருந்தது.வேதியியல் ஆசிரியர் கலைமலர், பாடத்தை எளிமையாகவும் தெளிவாகவும் கற்பித்தார். 'நீட்' தேர்வுக்குத் தேவையான சிறப்பு நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்த ஜாஸ்மின் ஆசிரியர், 'நீட்' பயிற்சிக்குத் தேவையான தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதிலும், வழிகாட்டி நூல்கள் வாங்குவதிலும் உதவி செய்தார்.தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து ஊக்கமும் வழிகாட்டுதலும் அளித்தனர். அவர்களின் அக்கறையும் பயிற்சியும் தான் இன்று எம்.பி.பி.எஸ்., படிக்கும் என் கனவை நனவாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்