உள்ளூர் செய்திகள்

குரூப்-1 வினா-விடைத்தாளில் தவறு ஆராய குழு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குரூப்-1 பணியிடங்களுக்கான தேர்வில் வினா, விடைத்தாளில் தவறுகள் இருப்பதாக கூறப்படும் புகார்களை ஆராய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் 32 பேரின் விடைத்தாளை அந்தக் குழு சரிபார்க்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குரூப்-1 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் முதல்நிலை தேர்வு நடந்தது. ஏப்ரல் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் 32 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சில கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகள் தவறானவை என்றும், சில கேள்விகளே தவறானவை என்றும் அந்த மனுக்களில் கூறப்பட்டன. இந்த குளறுபடிகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி.,க்கு மனுக்கள் அனுப்பியும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தங்களுக்கு சரியான மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரினர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தேர்வு முடிந்த மூன்று நாட்களில் மனுதாரர்கள் ஆட்சேபணை எதையும் எழுப்பவில்லை என டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் கூறப்பட்டது. இருந்தாலும், ‘கீ’ விடைத் தொகுப்பில் தவறு எதுவும் இல்லை என உறுதிபட தெரிவிக்கவில்லை. சரியாக கேட்கப்படாத கேள்விகள், ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் குறித்த விவரங்களை 7ம் தேதிக்குள் மனுதாரர்கள் அனுப்ப வேண்டும். சர்ச்சைக்குரிய கேள்விகள், பதில்கள் ஆகியவற்றை ஆராய நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டும். நிபுணர்கள் குழு ஆராய்வுக்குப் பின், கேள்விகளை எழுதியவர்களுக்கு தகுந்த மதிப்பெண்களை வழங்கி, முதல்நிலை தேர்வில் இறுதி மதிப்பெண்களை முடிவு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைக்கு கால அவகாசம் பிடிக்கும் என்பதால், 16, 17ம் தேதிகளில் நடக்க உள்ள பிரதான தேர்வை எழுத மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும். நிர்ணயித்த கட்-ஆப் மதிப்பெண்களை மனுதாரர்கள் பெற்றால், இறுதி தேர்வுக்கான தாள்களை திருத்தலாம். இல்லையென்றால் அந்தத் தேர்வு தாள்களை திருத்த வேண்டியதில்லை. வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு நீதிபதி பால்வசந்தகுமார் தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்