இந்தாண்டில் 1 லட்சம் பேர் பணிநீக்கம்; ஆட்குறைப்பில் ஐ.டி., நிறுவனங்கள் தீவிரம்
புதுடில்லி: இந்தாண்டு மட்டும், உலகம் முழுதும், செலவு குறைப்பு நடவடிக்கையாக, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை, முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து 'லே ஆப்ஸ்' இணையதளம் தெரிவித்துள்ளதாவது: முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், முதல்கட்டமாக தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளன. அதன்படி, இந்தாண்டு இதுவரை 218 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 1,12,732 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளன. அடுத்த கட்டமாக, மேலும் பலரைப் பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.பெரும்பாலான நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பொருளாதார சுணக்கம் ஆகியவை காரணமாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், இன்டெல் மற்றும் டி.சி.எஸ்., ஆகிய நிறுவனங்கள் இதுவரை ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்துள்ளன.இதில், நிறுவனத்தின் தலைமைப்பொறுப்புகள், நடுத்தர தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகளவில் வேலையிழப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்நிறுவனங்கள், பணியாளர்களுக்கான செலவைக் குறைத்து, ஏ.ஐ., தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்றவற்றில் கூடுதல் முதலீடு செய்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.