உள்ளூர் செய்திகள்

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு விசா: அமெரிக்க தூதரக அதிகாரி தகவல்

இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று சென்னை அமெரிக்க தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரெட்ரிக் கப்லான் தெரிவித்தார். காட்டாங்கொளத்தூர், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், ‘வெளிநாட்டில் செமஸ்டர்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கல்வி மற்றும் கலாசார வேறுபாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 48 மாணவ, மாணவிகள் ஏற்கனவே பல நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு 41 மாணவ, மாணவிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அங்கு, மாணவர்கள் பெறும் ‘கிரெடிட்கள்’ எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்திற்கு மாற்றம் செய்யப்படும். பல்கலைக் கழகத்தின் பாட திட்டங்கள் சர்வதேச கல்விக்கு நிகராக இருப்பதால் இம்மாற்றம் செய்வது எளிதாகிறது. மாணவ, மாணவிகளை  வெளிநாட்டிற்கு அனுப்புவதோடு, பண உதவியும் செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ‘வெளிநாட்டில் செமஸ்டர்’ திட்ட விழா ஆகஸ்ட் 12ம் தேதி நடந்தது. விழாவில், பல்கலைக்கழக இணை துணைவேந்தர் கணேசன் வரவேற்றார். டாக்டர் கோபால் திட்டம் குறித்து பேசினார். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சத்யநாராயணன் சிறப்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பேசுகையில், ‘வெளிநாடுகளில் உள்ள இந்த திட்டத்தை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம் பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள கல்வி முறைகள் மற்றும் கலாசாரத்தை கற்று உணர முடியும். ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் பல்கலைக் கழகம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படுகிறது,’ என்றார். விழாவில், முன்னாள் ஹாக்கி கேப்டன் பாஸ்கர் பேசுகையில், ‘நூறுகோடி மக்கள் இருந்தும் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கப்பதக்கம் கூட பெறவில்லையே என்ற பெருமூச்சுக்களுக்கு அபினவ் பிந்த்ரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தங்கப்பதக்கம் பெற்றது விளையாட்டு வீரர்களுக்கு புது உற்சாகத்தை அளிக்கும்,’ என்றார். அமெரிக்க தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி, பிரெட்ரிக் கப்லான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபேசுகையில்,‘கல்விக்கு எந்தவொரு தடையும் இல்லை. அமெரிக்கா தூதரகத்தில், தமிழகத்திற்கு தினசரி  ஆயிரத்து 400 விசாக்களும், இந்தியா முழுமைக்கும் மூவாயிரத்து 800 விசாக்களும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில், ஆண்டிற்கு 7.6 லட்சம் பேருக்கு விசா வழங்கப்படுகிறது. இனி, ஆண்டிற்கு 10 லட்சம் பேருக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஐதாராபாத்தில் துணை தூதரகம் திறக்கப்படவுள்ளது. அமெரிக்காவில், 83 ஆயிரம் இந்திய மாணவ, மாணவிகள் உள்ளனர். சிலிகான்வேலி பகுதியில் ஏழு நிறுவனங்களுக்கு ஒரு நிறுவனம் இந்தியரால் துவக்கப்பட்டுள்ளது. இந்த ‘வெளிநாட்டில் செமஸ்டர்’ திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்,’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்