வரும் 10ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர்: திருப்பாச்சூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கலைக் கல்லுாரியில், வரும் 10ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து, திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றன.அதன்படி, வரும் 10ம் தேதி, திருப்பாச்சூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பட கல்லுாரியில், காலை 08:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள, 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இந்த முகாமில் பங்கேற்க, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.முகாமில், 10, பிளஸ் - 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்கலாம். இதில் பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.