தமிழகத்தில் 11,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
சென்னை: அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 1,030 ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். சென்னையில் செப். 23ம் தேதி மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவுகளை வழங்கி அமைச்சர் தென்னரசு பேசியதாவது:தொடக்கக் கல்வித்துறையில் 21 ஆயிரத்து 451 ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒப்புதல் அளித்து, அதில் 14 ஆயிரத்து 837 பேர் இதுவரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6,614 ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். பள்ளிக் கல்வித்துறையில் 21 ஆயிரத்து 686 ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டு, அவர்களில் 17 ஆயிரத்து 482 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 4,204 பேர் நியமிக்கப்படுவர். மொத்தத்தில் 10 ஆயிரத்து 818 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர். ஒரு பக்கம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும் வேலைவாய்ப்பு வழங்குகிறோம். படித்த இளைஞர்களுக்கும் போட்டித்தேர்வு மூலம் வாய்ப்பு வழங்குகிறோம். புதிய ஆசிரியர்களுக்கு அக்டோபர் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இப்போதைக்கு ஆசிரியர் பயிற்றுனர்களாகவும், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களாகவும் பணியாற்றினாலும் வரும் காலங்களில் இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். அதற்கேற்ப பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.