வரும் 16ம் தேதி வெளியாகிறது மருத்துவ தரவரிசை பட்டியல்
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது, 3ம் தேதி துவங்கியது. &'நீட்&' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.இதுவரை, அரசு இடங்களுக்கு பதிவு செய்த, 24 ஆயிரத்து, 900 மாணவர்களில், 23 ஆயிரத்து, 218 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். இதில், 19 ஆயிரத்து, 7 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு பதிவு செய்த, 14 ஆயிரத்து, 234 பேரில், 12 ஆயிரத்து, 577 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில், 9,903 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம், இன்று மாலை, 5:00 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள், ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருந்தால், சேர்க்க வேண்டிய பதிவு மற்றும் சான்றிதழை, selmedi@yahoo.co.in என்ற, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கல்லுாரிகள், கட்டணம், விண்ணப்பிப்பது போன்ற விபரங்களுக்கு, இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப்பேட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், 044 - 28364822, 98842 24648, 98842 24649, 98842 24745, 98842 24746 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, தகவலை பெறலாம். இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 16ம் தேதி வெளியிட, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.