மே 18 முதல் சட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள்
சென்னை: "பி.எல். பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதி முதல் வழங்கப்படும்&'&' என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் கூறினார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டிற்கான பி.எல். பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையிலும் பெறலாம். ஐந்தாண்டு பி.எல். பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிப்போர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 20 வயதும், எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு 22 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 45 சதவீதமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதேபோல், மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதும், எஸ்.சி., - எஸ்.டி. பிரிவினர் 35 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 45 சதவீதமும், எஸ்.சி., - எஸ்.டி. பிரிவினர் 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வரும் கல்வியாண்டில், சட்டப் பல்கலையில் பி.ஏ. பி.எல். (ஹானர்ஸ்) மற்றும் பி.எல்.(ஹானர்ஸ்) பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டு பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) படிப்பில், 40 இடங்களும், பி.எல்.(ஹானர்ஸ்) 20 இடங்களும், ஆகமொத்தம் 60 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏழு அரசு சட்டக் கல்லூரிகளிலும், மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கு 1,262 பேரும், ஐந்தாண்டு பட்டப்படிப்புகளுக்கு 1,052 பேரும் சேர்க்கப்படவுள்ளனர். மேலும், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதியும், மூன்றாண்டு பட்டப்படிப்புக்கு ஜூலை 30ம் தேதியும் கடைசி நாள்" என்று கூறினார்.