பொறியியல் 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை: மெக்கானிக்கல் பிரிவுக்கு இன்று கலந்தாய்வு
காரைக்குடி: பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, சிவில் பிரிவு கவுன்சிலிங் நேற்று முடிவடைந்தது. மெக்கானிக்கல் பிரிவுக்கு இன்று கலந்தாய்வு துவங்குகிறது. பாலிடெக்னிக், பி.எஸ்சி. முடித்தவர்கள், பி.இ. 2ம் ஆண்டில் நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி. கல்லூரியில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. ஒரு லட்சத்து 4 ஆயிரம் இடங்களுக்கான கவுன்சிலிங்கிற்கு 21,428 பேர் விண்ணப்பித்தனர். முதல் நாளில் நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 60 பேரும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர்கள் 24 பேரும், விளையாட்டு வீரர்கள் 16 பேரும், பி.எஸ்சி. முடித்தவர்கள் 10 பேரும் பங்கேற்று சேர்க்கைக்கான உத்தரவு பெற்றனர். 20-ம் தேதி கெமிக்கல், டெக்ஸ்டைல்ஸ், லெதர், பிரிண்டிங், சிவில் உள்ளிட்ட பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. நேற்று மாலை 6 மணியுடன் சிவில் பிரிவுக்கான கவுன்சிலிங் முடிந்தது. மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், 4,219 பேர் மட்டுமே விண்ணப்பத்திருந்தனர். இதில், 3,713 பேர் சேர்க்கை செய்தனர். 20 ஆயிரம் இடங்கள் உள்ள மெக்கானிக்கல் பிரிவு கலந்தாய்வு இன்று காலை முதல் வரும் 27 வரை நடக்கிறது. இதற்கு 7,265 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.இ. 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா, ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் ஏற்பாட்டை செய்துள்ளனர்.