உள்ளூர் செய்திகள்

பொறியியல் 2ம் ஆண்டில் மாறுதல் பெறுவதில் சிக்கல்

இந்த நடைமுறையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் இரண்டாம் ஆண்டில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் விவரங்களை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு தெரிவிக்காததால், இந்த நிலை ஏற்படுவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முதல் தேதியில் இருந்து, சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது. தரமான, முன்னணி கல்லூரிகளில் படித்தால் தான், நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது, அனைத்து மாணவர்களின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக, அண்ணா பல்கலையிலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் சேர வேண்டும் என்பதில், மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கட்-ஆப் மதிப்பெண் 198 வரை எடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, அண்ணா பல்கலையிலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் இடம் கிடைக்கின்ற நிலை உள்ளது. இதற்கு குறைவாக கட்-ஆப் மதிப்பெண் பெறும் மாணவர்கள், மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளையோ அல்லது அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளையோ அல்லது தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் கீழோ சேர்கின்றனர். இப்படி, ஏதாவது ஒரு அரசு அல்லது அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முடித்துவிட்டால், இரண்டாம் ஆண்டில், தாங்கள் விரும்பும் வேறொரு அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு மாறுதல் பெற்றுச் செல்ல முடியும். பிளஸ் 2, கட்-ஆப் மதிப்பெண் மற்றும் முதலாம் ஆண்டில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளிலும் தேர்ச்சி ஆகிய இரு நிலைகளின் அடிப்படையில், இரண்டாம் ஆண்டில் வேறொரு கல்லூரிகளுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, 2008 அக்டோபர் 23ம் தேதி, தமிழக அரசு ஒரு அரசாணையையும் பிறப்பித்துள்ளது. அதில், "அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இதே பிரிவில் உள்ள வேறொரு கல்லூரிகளுக்கு மாறுதல் பெறலாம். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயில்பவர்கள், வேறொரு சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு மாறுதல் பெறலாம். அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு மாறுதல் பெறலாம். அதேபோல், அந்த கல்லூரிகளை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, ஒவ்வொரு ஆண்டும் முதலாம் ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்கள், இரண்டாம் ஆண்டில், தாங்கள் விரும்பும் அல்லது தங்களது பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு கல்லூரி மாறுதல் கோரி விண்ணப்பிக்கின்றனர். இந்த நடைமுறைகளை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கவனிக்கிறது. இதில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் மட்டும், இரண்டாம் ஆண்டில் எந்த மாணவரும் சேர முடியாத நிலைமை சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் நான்கு உறுப்புக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்கள் விவரங்களை, தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்திற்கு தெரிவிக்காதது தான் காரணம். இந்த கல்லூரிகளில், முதலாம் ஆண்டில் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதித்த இடங்களை விட, கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் 10 மாணவர்கள் வரை, இடையில் வேறு படிப்புகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்படும் காலியிடங்களை, முறைகேடாக குறிப்பிட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த கல்லூரிகளில் உள்ள காலியிட விவரங்கள், வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் சேர தகுதியான மாணவர்கள் இருந்தும், அவர்கள் சேர அண்ணா பல்கலை நிர்வாகம் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் உள்ள குளறுபடிகளை, உயர்கல்வித் துறை உடனடியாக களைவதுடன், நடப்பு கல்வியாண்டில் இருந்தாவது கல்லூரி மாறுதல் பட்டியலில் அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்