மருத்துவக்கல்லூரியில் 2ம் நாள் ஆய்வு
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.சி.ஐ.,குழுவினர் 2 வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து மாநிலங்களிலும் புதியதாக துவங்கும், ஒவ்வொரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும்,தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை டில்லி இந்திய மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு மேற்கொள்வது வழக்கம். ஆய்வின் போது, ஓரளவிற்கு தேவையான வசதிகள் இருக்கும் பட்சத்தில் தற்காலிக அனுமதி கிடைக்கும். அடுத்த ஆய்விற்குள் எம்.சி.ஐ., விதிகளின்படி தேவையான வசதிகள் இருந்தால் மட்டுமே தொடர்ந்து அனுமதி கிடைத்து, செயல்பட முடியும். இதன்படி,கடந்த ஆண்டு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தற்காலிக அனுமதி கிடைத்தது. 2வது ஆண்டு ஆய்விற்காக, டில்லி எம்.சி.ஐ.,யில் இருந்து பெங்களூரு டாக்டர் வீரணகவுடா தலைமையிலான குழு 2 வது நாளாக நேற்றும் ஆய்வு மேற்கொண்டது. போதுமான பேராசிரியர், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா, அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.