டெக்ஸ்பேர் 2026 கண்காட்சியில் ஏ.ஐ., டெக்ஸ்டைல் கருத்தரங்கு துவக்கம்
கோவை: கோவையில் சர்வதேச ஜவுளி இயந்திர, உதிரி பாகங்கள் கண்காட்சி என்ற டெக்ஸ்பேர் 2026 கண்காட்சியில், ஏ.ஐ., டெக்ஸ்டைல் கருத்தரங்கு நடக்கிறது.சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள் கண்காட்சியை தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நடத்துகிறது. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வளாகத்தில் இந்த கண்காட்சியின் 15வது பதிப்பு தொடங்குகிறது. மார்ச் 6 முதல் 9 வரை நடக்கும் கண்காட்சியில் ஜெர்மன், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, ஜப்பான், எகிப்து உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கின்றன. உள்நாட்டில் கோவை, மும்பை , பெங்களூரு நகரங்களிலிருந்தும் இயந்திர தயாரிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் துரை பழனிசாமி கூறுகையில், “கண்காட்சியின் முதல் நாளான மார்ச் 6 மதியம் 02:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை முக்கிய நிகழ்வாக ஜவுளித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.,) எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்த ஏ.ஐ., டெக்ஸ்டைல் கருத்தரங்கு நடக்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் ஜவுளி இயந்திர தொழிலிலும், மில்களிலும் ஏற்படும் தாக்கங்கள், பயன்பாடுகள் குறித்த விரிவான விளக்கங்கள் இடம் பெறும். டெக்ஸ்டைல் இயந்திரங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் 240 அரங்குகளில் இடம் பெறுகின்றன.சர்வதேச நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தங்களால் பிரிட்டன், அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள், செயற்கை பஞ்சு மீதான குவிப்பு வரி நீக்கம், ஜிஎஸ்டி வரி குறைப்பு, தர கட்டுப்பாட்டு சட்டம் நீக்கம், பருத்தி உற்பத்தி தொலைநோக்கு கொள்கை போன்ற கருத்துரைகள் இடம்பெறுகின்றன,” என்றார்.கண்காட்சியை ராம்கோ குழும தலைவர் வெங்கட்ராம ராஜா துவக்கி வைக்கிறார். இந்திய ஜவுளி சம்மேளனத்தின் தலைவர் அஸ்வின் சந்திரன் தலைமை வகிக்கிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் இயக்குனர் சுரேஷ் பாபுஜி விருந்தினராக பங்கேற்கிறார். ஜவுளி தொழில் நிலைப்பாடு குறித்து, டெல்லி வஷீர் அட்வைசரி நிறுவனத்தின் இணை இயக்குனர் பிரசாந்த் அகர்வால் பேசுகிறார். டெக்ஸ்பேர் கண்காட்சி மார்ச் 9 வரை காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடக்கிறது. ஜவுளி தொழிலில் உள்ளோர்க்கு பயனுள்ளதாக அமையும்.