திண்டுக்கல்லில் 4 கல்லுாரிகள் அமைக்க ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உயர்கல்வித்துறை சார்பில் 4 கல்லுாரிகள், சித்தா கல்லுாரி அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், இலக்கிய களமும் இணைந்து டட்லி மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தும் புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சிகள், திருவிழாக்கள் நடக்கிறது. 126 அரங்குகள் அமைக்கப்பட்டு 2 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியிருக்கிறது. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.இந்தாண்டு கூடுதலாக 50 லட்சம் புத்தகம் விற்பனையாகியிருக்கிறது. முதல்வர் கல்வித்துறை மட்டுமல்ல அனைத்து துறையும் வளர வேண்டுமென உழைத்து கொண்டிருக்கிறார்.எல்லாருக்கும் எல்லாம் என்பதே அவரின் தாரக மந்திரம். அண்ணா துரையின் கனவு ஒவ்வொரு வீட்டிலும் நுாலகம் இருக்க வேண்டிமென்பதே. அதன்படி அனைத்து ஊராட்சி, நகராட்சிகளில் நுாலகம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகளில் அவை சரியாக இல்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றதும் அனைத்தும் சீரமைக்கப்பட்டு அங்குதான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது.மதுரையில் நுாலகம் திறந்து அறிவுகளஞ்சியத்தை அனைவரும் பெற வேண்டுமென்பதற்காக கலைஞர் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உயர்கல்வித்துறை சார்பில் 4 கல்லுாரிகள்,சித்தா கல்லுாரி அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. தொழில் பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. போட்டித்தேர்வுகளுக்காக மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.ஆயக்குடியில். மரத்தடியில் படிக்கின்றனர். ஆனால், 2 மாதங்களில் குளிர்சாதன வசதியோடு களஞ்சிபட்டியில் அரசு சார்பில் போட்டி தேர்வு மையம் அமையவுள்ளது. அனைத்து இடங்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது, என்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். இலக்கிய கள நிர்வாக செயலர் கண்ணன் வரவேற்றார். எஸ்.பி., பாஸ்கரன், துணை மேயர் ராஜப்பா, டி.ஆர்.ஓ., சேக் முஹைதீன், ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன் பங்கேற்றனர்.